சினிமா விமர்சனம்: சினம்


சினிமா விமர்சனம்: சினம்
x
நடிகர்: அருண் விஜய் நடிகை: பல்லக் லால்வாணி  டைரக்ஷன்: ஜி.என்.ஆர். குமாரவேலன் இசை: ஷபீர் ஒளிப்பதிவு : எஸ். கோபிநாத்

சமூகத்தில் நடக்கும் கொடுமைகள் கண்டு, ‘எனக்கென்ன?’ என்று ஒதுங்காமல், சினம் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்கிறார் டைரக்டர் ஜி.என்.ஆர். குமாரவேலன்

போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண் விஜய், காதலித்து மணந்த மனைவி பாலக் லால்வானி மற்றும் ஒரே பெண் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்கிறார். இவரது நேர்மையும் கோபமும் ரவுடிகளுடன் தொடர்பு வைத்துள்ள இன்ஸ்பெக்டருக்கு பிடிக்காமல் போக அவ்வப்போது அருண் விஜய்யை அவமதிக்கிறார். பாலக் லால்வானி பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டு இரவில் திரும்புகிறார். பஸ் நிலையத்தில் இறங்கி வீட்டுக்கு ஆட்டோவில் பயணிக்கிறார். அவரை அழைத்துச் செல்வதற்காக அருண் விஜய் வழியில் காத்து இருக்கிறார். அப்போது பாலக் லால்வானி ஆபத்தில் சிக்குகிறார். பழியை அருண் விஜய் மீது இன்ஸ்பெக்டர் சுமத்துகிறார். இதனால் இன்ஸ்பெக்டரை தாக்கும் அருண் விஜய்யை பணி இடைநீக்கம் செய்கின்றனர்.

ஒரு கட்டத்தில் மீண்டும் பணியில் சேர்ந்த அவரிடம் மனைவி சம்பந்தமான வழக்கை விசாரிக்கும் பொறுப்பை ஒப்படைக்கின்றனர். குற்றவாளிகளை அருண் விஜய் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது மீதி கதை. அருண் விஜய் கடமை தவறாத நேர்மையான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அதிரடி சண்டை, குடும்ப உறவு, சென்டிமென்ட் என்று அனைத்து நிலையிலும் நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார். அருண் விஜய், பாலக் லால்வானி மோதல், காதல் காட்சிகளில் ஜீவன். உயர் அதிகாரியின் கேலி, சீண்டல்களை அமைதியாக கடந்து செல்வது. ரவுடிகளிடம் காட்டும் பெரும் கோபம், காதல் மனைவியை இழந்து கதறி துடிப்பது. கிளைமாக்சில் எரிமலையாய் குமுறுவது என்று சினிமாத்தனம் இல்லாமல் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி கதை முழுவதும் அருண் விஜய் வியாபித்து நிற்கிறார்.

அருண் விஜய்பாலக் லால்வானி சிறிது நேரம் வந்தாலும் நிறைவு. அவரது முடிவு சோகம். போலீஸ் ஏட்டாக வரும் காளி வெங்கட் அனுபவ நடிப்பால் கவர்கிறார். விசாரணையை இன்னும் அழுத்தமாகவும் சுவாரஸ்யமாகவும் காட்சிப்படுத்தி இருக்கலாம். ஒரு கொலையின் பின்னணியில் நடக்கும் போலீஸ் கதையை திகில் சென்டிமென்டுடன் விறுவிறுப்புமாக நகர்த்தி உள்ளார் இயக்குனர் ஜி.என்.ஆர் குமரவேலன், குற்றவாளிகள் யார் என்பதை சஸ்பென்சாக வைத்து கிளைமாக்சில் முடிச்சை அவிழ்ப்பது திருப்பம். கோபிநாத்தின் ஒளிப்பதிவு காட்சிகளை திகிலாக்கி இருக்கிறது. ஷபீர் பின்னணி இசை காட்சிகளோடு ஒன்ற வைக்கிறது.


Next Story