52 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் நபர் ரூ.3.5 கோடி செலவு...! கிடைத்த அதிகபட்ச பரிசுத்தொகையோ 5 ஆயிரம்


52 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் நபர் ரூ.3.5 கோடி செலவு...! கிடைத்த அதிகபட்ச பரிசுத்தொகையோ 5 ஆயிரம்
x

கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ராகவன், 18 வயதில் லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 10 லாட்டரி சீட்டுகள் வரை வாங்குகிறார்.

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி விற்பனை செய்து வருகிறது. ஓணம் பண்டிகையையொட்டி ரூ.25 கோடி பரிசு தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டை விற்பனை செய்தது.

இதன் குலுக்கல் கடந்த 5 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதில் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த அனுப் என்ற ஆட்டோ டிரைவருக்கு முதல் பரிசான ரூ.25 கோடி கிடைத்தது.

ஒரே நாளில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்தது. அவரும், மனைவி மற்றும் குழந்தையுடன் சேர்ந்து பொதுமக்களின் பாராட்டை ஏற்றுக்கொண்டார். பரிசு விழுந்த மறுநாள், அனுப்புக்கு வரிபிடித்தம் போக சுமார் ரூ.15 கோடியே 75 லட்சம் பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியானது.

இதையடுத்து அவர் பரிசு விழுந்த லாட்டரி சீட்டை வங்கியில் டெபாசிட் செய்தார். பணம் கிடைத்த பின்னர் அதனை கொண்டு வீடு கட்டுவேன், ஏழைகளுக்கு உதவுவேன் எனக்கூறினார். அதன்பின்பு தான் அவருக்கு துயரம் தொடங்கியது.

தினமும் அனுப்பிடம் உதவி கேட்டு ஏராளமானோர் அவரது வீட்டுக்கு வரத்தொடங்கினர். ஆஸ்பத்திரி செலவுக்கு பணம் தாருங்கள் எனவும், தொண்டு நிறுவனங்களுக்கு உதவுங்கள் என்றும் அவரை தேடி பலரும் வரத்தொடங்கினர்.

அதுமட்டுமின்றி அனுப்பின் உறவினர்களும், வீட்டுக்கு வந்து எங்களுக்கும் கொஞ்சம் பணம் தா, என கேட்டனர். இது மட்டுமின்றி கடைக்கு சென்றால் பொருளின் விலையை விட கூடுதலாகவும் சிலர் பணம் கேட்டனர். இன்னும் சிலர் ஒருபடி மேலே போய் பணம் கேட்டு மிரட்டவும் செய்தனர்.

பரிசு விழுந்த சில நாட்களிலேயே தனது நிலை ஒரேயடியாக மாறி போனதை கண்டு அனுப் திகைத்து போனார். வீட்டைவிட்டு வெளியே வரவே பயந்தார். இதற்காக தனது வீட்டை பூட்டிவிட்டு சகோதரியின் வீட்டில் மறைந்து வாழ்ந்து வருகிறார்.

லாட்டரி அடித்து ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியவர்கள் பற்றி நாம் பலரும் படித்திருப்போம். ஆனால் இவர் லாட்டரி சீட்டு வாங்கியே ஓய்ந்துள்ளார்.

கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ராகவன். இவர் கடந்த 52 ஆண்டுகளாக லாட்டரி சீட்டுகளை வாங்கி வருகின்றார். லாட்டரி மூலம் தனது வாழ்க்கை என்றென்றும் மாறும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். இவர் இதுவரை லாட்டரி சீட்டுக்கு செலவு செய்த தொகை எவ்வளவு தெரியுமா? அந்த மொத்தம் ரூ.3.5 கோடியைத் தாண்டியுள்ளது.இவ்வளவு செலவு செய்தது கூட அவருக்குத் தெரியாது.

அவர் வைத்து இருந்த பழைய லாட்டரி சீட்டுகளை மொத்தமாக எண்ண ஆரம்பித்தபோது தான் இந்த விஷயம் தெரிய வந்தது. ராகவன் தனது வருமானத்தில் ஒரு பகுதியை லாட்டரி சீட்டுக்காக ஒதுக்கி வருகிறார். அவர் இதுவரை வாங்கிய பழைய லாட்டரிகள் சாக்கு மூட்டைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. சமீபகாலமாக அனைத்தையும் கூட்டி கணக்கிட்டால் மொத்தம் ரூ.3.5 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இப்படி அவர் லாட்டரி வாங்கி இருந்தாலும் அவர் வென்ற அதிகபட்ச லாட்டரி பணம் எவ்வளவு தெரியுமா..? வெறும் ரூ. 5 ஆயிரம் மட்டுமே. இருந்தாலும் அவர் தான் லாட்டரி வாங்கும் முயற்சியை நிறுத்தவில்லை.

கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் ராகவன், 18 வயதில் லாட்டரி சீட்டு வாங்கத் தொடங்கினார். ஒரு நாளைக்கு 10 லாட்டரி சீட்டுகள் வரை வாங்குகிறார்.52 வருடங்களாக டிக்கெட் வாங்கி வந்தாலும் துரதிர்ஷ்டவசமாக அவரது ஆசை நிறைவேறவில்லை.


Next Story