மொட்டையடித்து சந்நியாசியான கவர்ச்சி நடிகை....! இப்போது எப்படி இருக்கிறார்...?


மொட்டையடித்து சந்நியாசியான கவர்ச்சி நடிகை....! இப்போது எப்படி இருக்கிறார்...?
x
தினத்தந்தி 9 Dec 2022 6:51 AM GMT (Updated: 9 Dec 2022 6:53 AM GMT)

பல படங்களில் கிளாமர் ரோல்களில் துணிச்சலாக நடித்து புகழின் உச்சியில் இருந்தார்.

பாட்னா,

'கொஞ்சம் நிலவு கொஞ்சம் நெருப்பு, ஒன்றாக சேர்ந்தால் எந்தன் தேகம்' என்ற பாடலுக்கு நடனம் ஆடிய பெண்ணை நினைவிருக்கிறதா? இயக்குனர் மணிரத்தினத்தின் திருடா திருடா படத்தில் சந்திரலேகாவாக நடித்து ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் தான் அனு அகர்வால்.

இவர் கடந்த 1990-ம் ஆண்டு தனது 21-வது வயதில் பாலிவுட்டில் அறிமுகமானார். இவர் நடித்த முதல் படமான ஆஷிகி திரைப்படம் அவருக்கு பெரும் புகழை பெற்று தந்தது. பட வெற்றிக்கு பிறகு ரசிகர்கள் இவரை ஆஷிகி கேர்ள் என்று அழைக்க தொடங்கினார்.

அதன்பிறகு, பல படங்களில் கிளாமர் ரோல்களில் துணிச்சலாக நடித்து புகழின் உச்சியில் இருந்தார். ஆனால் இவர் 1994-ம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டார்.கடந்த 2015-ம் ஆண்டு அன்யூஷுவல்: மெமயர் ஆப் எ கேர்ள் ஹூ கேம் பேக் ப்ரம் தி டெட் என்ற தனது சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டார்.

தற்போது பீகாரில் வசித்து வசித்து வரும் அனு அகர்வால், அங்கு யோகா மையத்தை தொடங்கி ஆசிரியராக இருந்து வருகிறார். இவரின் புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், தனது வாழ்வில் நடந்த சம்பவங்கள் குறித்து அனு அகர்வால் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,

கடந்த 1992-ம் ஆண்டிலேயே நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்று உணர ஆரம்பித்தேன். அது என்னவென்று எனக்கு தெரியவில்லை, ஆனால் நான் எப்போதும் எதையாவது விரும்பினேன். நான் விரும்பியதை செய்வதற்கு திரையுலகில் இருந்து வெளியேற வேண்டியிருந்தது. என் முடிவை பற்றி நான் சொன்னபோது யாரும் நம்பவில்லை. நான் வெளியேறும் அளவுக்கு நான் பைத்தியமாகிவிட்டேனா என்று மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

கடந்த 1999-ம் ஆண்டு நான் ஒரு விபத்தில் சிக்கி கோமா நிலைக்குச் சென்றேன். விபத்து ஏற்படுவதற்கு முன்பு நான் ஒரு ஆசிரமத்தில் இருந்தேன், அங்கு எனக்கு ஆன்மீக பெயர் இருந்தது. விபத்துக்கு பிறகு, எனக்கு எல்லாம் மறந்து விட்டது, ஆனால் எனது ஆன்மீக பெயர் மட்டும் எனக்கு நியாபகம் இருந்தது.

நான் 2001-ம் ஆண்டு எனது தலையை மொட்டையடித்து சன்னியாசியாக மாறிவிட்டேன். கையில் ஒரு பையுடன் எளிமையான வாழ்க்கையை வாழத்தொடங்கினேன். எளிமையான சூழலில், மனதை பற்றியும், மனிதர்களை பற்றியும் படித்துக் கொண்டே வாழ்ந்து வந்தேன்.

விபத்திற்கு பிறகு லிப்ஸ்டிக் போடுவதை கூட மறந்துவிட்டேன். அதன் பிறகு எனது பழைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட தொடங்கினர். எனது மேக்கப் இல்லாத படங்கள் வைரலானது. என்னை சுற்றி நிறைய நடப்பதை பார்த்து நான் அதிர்ச்சியடைந்தேன்.

விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக மூன்று ஆண்டுகளுக்கு மேல் உயிருடன் இருக்க முடியாது என மருத்துவர்கள் கூறியது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், "அவள் உயிரிழந்து விடுவாள் , அவள் இன்னும் 3 வருடங்கள் மட்டுமே உயிருடன் இருப்பார் என்றனர். ஆனால் என்னால் குணமடைய முடியும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் கற்றுக்கொண்டதை பயன்படுத்தி என்னை நானே குணப்படுத்திக் கொண்டேன்.

பின்னர், நான் ஏழை குழந்தைகளுக்கான யோகா கற்றுக்கொடுக்க தொடங்கினேன், பின்னர் நான் பிற அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டேன்" நான் 2006-ல் திரும்பி வந்து மக்களையும் பத்திரிகையாளர்களையும் சந்திக்க ஆரம்பித்தேன். நான் அவர்களை பணிவுடன் வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story