தேசிய கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது


தேசிய கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது
x

காஷ்மீர் ஸ்ரீநகரில் ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது என்று யு.டி.காதர் தெரிவித்துள்ளார்.

மங்களூரு:-

வரலாற்று சிறப்புமிக்கது

காங்கிரஸ் முன்னாள் மந்திரியும், எம்.எல்.ஏ.வுமான யு.டி.காதர், மங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா மொழி, மதம் பெயரில் நாட்டை பிரிக்கிறது. தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக நாட்டை பிளவுப்படுத்த பா.ஜனதாவினர் முயற்சிக்கிறார்கள். ஆனால் ராகுல்காந்தி, அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து வலுவான தேசத்தை உருவாக்க முயற்சிக்கிறார். 135 நாட்கள் 3,970 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாரத் ஜோடோ யாத்திரையை ராகுல்காந்தி மேற்கொண்டார். அவரது இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரைக்கு பிறகு ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தான் மிகப்பெரியது. காஷ்மீர் ஸ்ரீநகரில் ராகுல்காந்தி தேசிய கொடி ஏற்றியது வரலாற்று சிறப்புமிக்கது. இந்த யாத்திரையின் நோக்கம் ஜனநாயக சக்திகளை ஒன்றிணைப்பதாகும்.

மக்களின் ஆதரவு

பாரத் ஜோடோ யாத்திரையின்போது காஷ்மீரில் ராகுல்காந்தி ஆதரவு கிடைக்காது என்று பா.ஜனதாவினர் வதந்தி பரப்பினர். ஆனால் அங்கு ராகுல்காந்திக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது. ராகுல்காந்தி மீதான மரியாதையை குலைக்க பா.ஜனதா ரூ.600 கோடிக்கு மேல் செலவு செய்தது. அதனை முறியடித்து செலவு எதுவும் செய்யாமல் பாரத் ஜோடோ யாத்திரை மூலம் ராகுல்காந்தி நாடு முழுவதும் உள்ள மக்களின் ஆதரவை பெற்றுள்ளார்.

யாத்திரையின்போது ராகுல்காந்தியின் எளிமை மற்றும் தலைமைத்துவத்தை மக்கள் உணர்ந்தனர். இதனை மக்கள் விரும்பினர். அனைத்து தரப்பு மக்களையும் அவர் தன்பக்கம் ஈர்த்துள்ளார். இந்த நாட்டு மக்களுக்கு நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கைக்கு ராகுல்காந்தி முன்னுரிமை அளிப்பார். இது நாட்டின் எதிர்காலத்துக்கு நல்ல அறிகுறியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story