தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை: 106 பேர் கைது


தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி சோதனை: 106 பேர் கைது
x

தமிழகம், கேரளா உள்பட 15 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பினர் அதிரடி சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி,

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு டெல்லியை மையமாக கொண்டு இயங்கி வருகிறது.

பயங்கரவாதத்துக்கு நிதிஉதவி

கேரளாவில் கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, நாட்டில் பயங்கரவாத செயல்களுக்கு நிதிஉதவி அளித்து வருவதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.), அமலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.

குறிப்பாக, குடியுரிமை திருத்த சட்ட போராட்டங்கள், 2020-ம் ஆண்டு டெல்லி கலவரம், ஹத்ராஸ் தலித் பெண் கற்பழித்து கொலைக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சில சம்பவங்களுக்கு இந்த அமைப்பு நிதிஉதவி அளித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

இந்த விவகாரத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகளுக்கு எதிராக லக்னோ சிறப்பு கோர்ட்டில் 2 குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

19 வழக்குகள் விசாரணை

இதைப்போல பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தொடர்பான 19 வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

இதில் பயங்கரவாதம் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தல், ஆயுத பயிற்சி முகாம்கள் நடத்துதல், பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் சேர்த்தல் தொடர்பாக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர்கள், தொண்டர்களுக்கு எதிராக தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இந்த வழக்குகள் தொடர்பாக நேற்று நாடு முழுவதும் உள்ள பாப்புலர் பிரண்ட் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தலைவர்களின் வீடுகளில் என்.ஐ.ஏ. தலைமையில் அமலாக்கத்துறை, மாநில போலீஸ் போன்ற விசாரணை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.

தமிழகத்தில் 11 பேர்

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, மத்திய பிரதேசம், மராட்டியம் உள்பட 15 மாநிலங்களில் இந்த அதிரடி சோதனை நடந்தது. மொத்தம் 93 இடங்களில் நடத்தப்பட்ட இந்த சோதனைகளில் 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 19 பேர் கைதாகினர். அடுத்ததாக தமிழகத்தில்11 பேர், கர்நாடகாவில் 7 பேர், ஆந்திராவில் 4 பேர், ராஜஸ்தானில் இருவர், உத்தரபிரதேசம், தெலுங்கானாவில் தலா ஒருவர் உள்பட 106 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, கோவை, திண்டுக்கல், தேனி, கம்பம், சாயல்குடி, ஏர்வாடி உள்பட 12 இடங்களில் அதிகாலையிலேயே இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் முக்கிய நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

கேரளாவில் திருவனந்தபுரம், கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது.

இதைப்போல மராட்டியத்தில் மும்பை, நவிமும்பை, பிவண்டி, அவுரங்காபாத், புனே, கோலாப்பூர், பீட், பர்பானி, நாந்தெட், ஜல்காவ், ஜல்னா, மாலேகாவ் ஆகிய பகுதிகளில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனையிட்டனர்.

சோதனைக்கு கண்டனம்

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய அளவில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் பணம், ஆயுதங்கள், டிஜிட்டல் கருவிகள் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தவர்களின் வீடுகள், அலுவலகங்கள், அமைப்பின் பயிற்சி முகாம்கள், தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆட்களை சேர்த்தவர்களின் இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அமைப்பின் தேசிய, மாநில மற்றும் உள்ளூர் தலைவர்களின் வீடுகளில் இந்த சோதனை நடத்தப்பட்டு இருப்பதாக கூறியுள்ள அந்த அமைப்பினர், மாநில அலுவலகமும் சோதனைக்கு உள்ளாகி இருப்பதாக கூறியுள்ளது.

அரசுக்கு எதிரான குரல்களை அடக்க விசாரணை அமைப்புகளை பயன்படுத்தும் பாசிச ஆட்சியின் அடக்குமுறையை கடுமையாக எதிர்ப்பதாகவும் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

போராட்டம், மறியல்

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகளில் நடத்தப்பட்ட இந்த மெகா சோதனை மற்றும் கைது நடவடிக்கைக்குஎதிராக பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்தது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் தொண்டர்கள் முக்கியமாக வாலிபர்கள் சாலை மறியல், ஆர்ப்பாட்டம் என போராட்டங்களில் ஈடுபட்டதால் பல இடங்களில் பெரும் பரபரப்பு நிலவியது.

இதைத்தொடர்ந்து அனைவரும் அமைதி காக்குமாறு அமைப்பின் தொண்டர்கள் மற்றும் வாலிபர்களுக்கு பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்தன.

பயங்கரவாதத்துக்கு எதிராகவும், சட்டத்துக்கு உட்பட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால், அனைவரும் அமைதியாக இருக்கத்தான் வேண்டும் எனவும் கூறியிருந்தன.

இந்திய நீதி அமைப்பு, சட்டம் மற்றும் அரசியல்சாசனம் மீது நம்பிக்கை வைத்திருப்பதாக இந்திய முஸ்லிம் மாணவர் அமைப்பு தனது டுவிட்டரில் குறிப்பிட்டு இருந்தது.

அமித்ஷா ஆலோசனை

இதற்கிடையே அரசின் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளுடன் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலாளர் அஜய் பல்லா, என்.ஐ.ஏ. இயக்குனர் திங்கர் குப்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட என்.ஐ.ஏ. சோதனைக்குப்பின் ஏற்பட்டுள்ள சூழல் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்ததாக உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.


Next Story