காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி, கொடி அறிமுகம்


காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத்தின் புதிய கட்சி, கொடி அறிமுகம்
x
தினத்தந்தி 26 Sep 2022 7:56 AM GMT (Updated: 26 Sep 2022 8:04 AM GMT)

காங்கிரசில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத் ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரில் புதிய கட்சியை தொடங்கி, கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல்-மந்திரியாக இருந்தவர் குலாம் நபி ஆசாத் (வயது 73). காங்கிரஸ் கட்சியில் 50 ஆண்டுகளுக்கும் மேல் இருந்த அவர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, ஆகஸ்ட் 26-ல் கட்சியில் இருந்து விலகினார்.

இதனையடுத்து, விரைவில் புதிய கட்சி தொடங்க உள்ளதாக கூறினார். அவரது வெளியேற்றம் கட்சியின் காஷ்மீர் பிரிவில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் பெருமளவில் வெளியேற தூண்டியது.

இந்நிலையில், குலாம் நபி ஆசாத், ஜனநாயக ஆசாத் கட்சி என்ற பெயரிலான புதிய கட்சியை தொடங்கி அதற்கான கொடியையும் அறிமுகப்படுத்தி உள்ளார்.

அந்த கொடியில் மூன்று வர்ணங்கள் உள்ளன. இதுபற்றி ஆசாத் கூறும்போது, மஸ்டர்டு (கடுகு) நிறம் படைப்பாற்றல் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை ஆகியவற்றை சுட்டி காட்டுகிறது. வெண்மை நிறம் அமைதியையும், நீல நிறம் சுதந்திரம், திறந்தவெளி, கற்பனை திறன் மற்றும் சமுத்திரத்தின் ஆழத்தில் இருந்து வானின் உச்சம் வரையிலான எல்லையையும் குறிக்கும் என அவர் கூறியுள்ளார்.

எங்களுடைய புதிய கட்சிக்கு உருது, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் 1,500 பெயர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்தி மற்றும் உருது மொழிகளின் கலப்பே இந்துஸ்தானி. எங்களது கட்சியின் பெயர் ஜனநாயகம், அமைதி மற்றும் சுதந்திர தன்மை ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டுமென நாங்கள் விரும்பினோம் என அவர் கூறியுள்ளார்.

ஒரு புது கட்சியை தொடங்குவதற்கு வேறு எந்த கட்சிகளிடமும் ஆலோசிக்கவில்லை என கூறிய அவர், எங்களுடைய கட்சியானது காந்திய கொள்கையின்படி இருக்கும் என ஆசாத் கூறியுள்ளார். எங்களது அரசியல் சாதி அல்லது மதம் சார்ந்து இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story