தொழிலாளியை கொன்று சாக்கடை கால்வாயில் உடல் வீச்சு


தொழிலாளியை கொன்று சாக்கடை கால்வாயில் உடல் வீச்சு
x
தினத்தந்தி 30 Nov 2022 9:30 PM GMT (Updated: 2022-12-01T03:01:05+05:30)

பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட தொழிலாளியை கொன்று, உடலை ராமநகரில் வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.

பெங்களூரு:-

தொழிலாளியை காணவில்லை

பெங்களூரு சோழதேவனஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட சிக்கபானவாரா அருகே சோமஷெட்டிஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் தொழிலாளியாக வேலை செய்தவர் தேசேகவுடா(வயது 48). இவரது சொந்த ஊர் ராமநகர் மாவட்டம் சன்னப்பட்டணா தாலுகா ராமநரசிம்ம ராஜபுரா கிராமம் ஆகும். இவரது மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு 18 ஆண்டுக்கு முன்பு திருமணம் திருமணம் நடந்தது. 2 பிள்ளைகள் உள்ளனர்.

இதற்கிடையில், கடந்த மாதம்(நவம்பர்) 27-ந் தேதி தனது கணவர் தேசேகவுடா காணாமல் போய் விட்டதாகவும், அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், எனவே அவரை மீட்டு கொடுக்கும்படியும் கூறி சோழதேவனஹள்ளி போலீஸ் நிலையத்தில் ஜெயலட்சுமி புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தேசேகவுடாவை தேடிவந்தனர். இதுபற்றி அனைத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

கழுத்தை இறுக்கி கொலை

மறுநாள்(28-ந் தேதி) ராமநகர் மாவட்டம் கெம்பேகவுடா தொட்டி அருகே பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் ஒரு நபரின் உடல் கிடந்தது. தகவல் அறிந்ததும் சன்னப்பட்டணா போலீசார் விரைந்து சென்று அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்திருப்பதுடன், உடலை சாக்கடை கால்வாயில் வீசியதும் தெரியவந்தது. மேலும் அந்த நபர் பெங்களூருவில் காணாமல் போனதாக தேடப்பட்ட தேசேகவுடா என்று உறுதி செய்யப்பட்டது.

இதுபற்றி சோழதேவனஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து ஜெயலட்சுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டார்கள். அதே நேரத்தில் ஜெயலட்சுமியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மனைவி, கள்ளக்காதலன் கைது

இதையடுத்து, ஜெயலட்சுமியின் செல்போனை பரிசீலனை நடத்தினார்கள். அப்போது அவர், ராஜேஸ் என்பவருடன் அடிக்கடி செல்போனில் பேசி இருப்பதும், தேசேகவுடா காணாமல் 26-ந் தேதி இரவில் இருந்து தொடர்ச்சியாக பேசி இருப்பதையும் போலீசார் கண்டுபிடித்தார்கள். இதையடுத்து ஜெயலட்சுமியையும், ராஜேசையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

அப்போது தனது கணவரை கள்ளக்காதலன் ராஜேசுடன் சேர்ந்து கொலை செய்ததை ஜெயலட்சுமி ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜெயலட்சுமி, ராஜேசை போலீசார் கைது செய்தார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

கள்ளத்தொடர்பு

அதாவது ஜெயலட்சுமிக்கும், தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றும் ராஜேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இதுபற்றி தேசேகவுடாவுக்கு தெரியவந்துள்ளது. உடனே அவர், ராஜேசுடன் உள்ள கள்ளத்தொடர்பை கைவிடும்படி மனைவி ஜெயலட்சுமியிடம் கூறியுள்ளார். இந்த கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே சண்டையும் ஏற்பட்டுள்ளது.

தனது கணவர் உயிருடன் இருந்தால் கள்ளத்தொடர்பை தொடர முடியாது என்று ராஜேசிடம் ஜெயலட்சுமி கூறி இருக்கிறார். பின்னர் தேசேகவுடாவை கொலை செய்ய 2 பேரும் திட்டமிட்டுள்ளனர். அதன்படி, கடந்த 26-ந் தேதி இரவு பண்ணை வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு மாடுகளை கட்ட வைத்திருந்த கயிற்றை எடுத்து தேசேகவுடாவின் கழுத்தை நெரித்து ராஜேஸ், ஜெயலட்சுமி கொலை செய்திருக்கிறார்கள்.

சாக்கடை கால்வாயில் வீச்சு

பின்னர் ராஜேஸ், தேசேகவுடாவின் உடலை ராமநகருக்கு தனது காரில் கொண்டுள்ளார். பின்னர் பெங்களூரு-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாயில் தேசேகவுடாவின் உடலை வீசி விட்டு, அவரது செல்போனை 500 மீட்டர் தூரத்தில் வீசினார். அத்துடன் காரையும் கெம்பேகவுடன தொட்டி கிராமத்தில் நிறுத்திவிட்டு ராஜேஸ் பெங்களூருவுக்கு திரும்பியது தெரியவந்தது.

போலீசாரிடம் சிக்கி கொள்ளலாம் தப்பிக்கவும், சாட்சிளை அழிக்கவும் ஜெயலட்சுமியும், ராஜேசும் முயற்சி செய்துள்ளனர். ஆனால் ஜெயலட்சுமியின் செல்போனை பரிசீலனை செய்த போது கள்ளக்காதல் மற்றும் தேசேகவுடா கொலை வெளிச்சத்திற்கு வந்ததாக வடக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் வினாயக் பட்டீல் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது தெரிவித்தார். கைதான 2 பேர் மீதும் சோழதேவனஹள்ளி போலீசார் வழக்குப்

பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story