மராட்டியத்தில் உள்ள ஆபத்தான கட்டிடங்களை 3-ம் நபர் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு ஷிண்டே உத்தரவு


மராட்டியத்தில் உள்ள ஆபத்தான கட்டிடங்களை 3-ம் நபர் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும்- அதிகாரிகளுக்கு ஷிண்டே உத்தரவு
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:47 PM GMT)

மாநிலம் முழுவதும் உள்ள ஆபத்தான கட்டிடங்களை 3-ம் நபர் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.

மும்பை,

மாநிலம் முழுவதும் உள்ள ஆபத்தான கட்டிடங்களை 3-ம் நபர் தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.

3-ம் நபர் தணிக்கை

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே நேற்று முன்தினம் மழைக்கால முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள், பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல் படையினர், ரெயில்வே அதிகாரிகள், விமான மற்றும் கடற்படையினர் உள்ளிட்டவர்களுடன் ஆலோசனை நடத்தினார். சையாத்ரி பங்களாவில் நடந்த ஆலோசனையின் போது மழைக்காலத்துக்கு முன் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகள், நகரில் உள்ள 226 ஆபத்தான கட்டிங்களில், 27 கட்டிடங்களில் இருந்து குடியிருப்புவாசிகள் வெளியேற்றிவிட்டதாக தெரிவித்தனர். இதை கேட்ட முதல்-மந்திரி மாநிலம் முழுவதும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களை 3-ம் நபர் மூலம் தணிக்கை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் ஆபத்தான கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றும்போது அவர்களுக்கு தேவையான இருப்பிட வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், அப்போது தான் மக்கள் கட்டிடத்தை காலி செய்ய ஒத்துக்கொள்வார்கள் என அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

உயிர் பலியை தடுக்க வேண்டும்

இதேபோல மழைக்காலங்களில் உயிர் பலி ஏற்படுவதை தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டார்.

அவர் இதுதொடர்பாக அதிகாரிகளிடம், "சொத்துக்கள் அழிந்தால் சம்பாதித்து கொள்ள முடியும். ஆனால் உயிரை திரும்ப பெற முடியாது. எனவே மழைக்காலத்தில் உயிர் பலி ஏற்படுவதை தடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் மீட்பு பணிகளுக்கு தொழில்நுட்பத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும். 24 மணி நேரமும் செல்போனை அதிகாரிகள் வைத்திருக்க வேண்டும். எல்லா துறை அதிகாரிகள், மாவட்ட, மண்டல அளவிலும் ஒருங்கிணைந்து அனைவரும் செயல்பட வேண்டும்" என்றார்.


Next Story