அதானி குழுமத்திடம் இருந்து தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும்- நானா படோலே வலியுறுத்தல்


அதானி குழுமத்திடம் இருந்து தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும்- நானா படோலே வலியுறுத்தல்
x
தினத்தந்தி 30 Jan 2023 6:45 PM GMT (Updated: 30 Jan 2023 6:47 PM GMT)

அதானி குழுமத்திடம் இருந்து தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

மும்பை,

அதானி குழுமத்திடம் இருந்து தாராவி மறுசீரமைப்பு திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் நானா படோலே வலியுறுத்தி உள்ளார்.

ஆய்வறிக்கை குற்றச்சாட்டு

உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ள இந்திய தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் பங்கு சந்தையின் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதுகுறித்து மராட்டிய காங்கிரஸ் கட்சி தலைவர் நானா படோலே கூறியதாவது:-

அதானி சிறைக்கு செல்வார்

பிரதமர் நரேந்திர மோடிக்கு, அதானியுடனான நெருக்கம் அவர் பிரதமராக வருவதற்கு முன்பு இருந்தே அறியப்படுகிறது. ஆட்சிக்கு வந்தபின்பு பிரதமர் மோடி தனது சிறப்பான கவனிப்பால் எஸ்.பி.ஐ. வங்கியிடம் இருந்து கடன் பெற்றுத்தந்து அதானி குழுமத்திற்கு உதவினார். மேலும் எல்.ஐ.சி. மூலமாக கிட்டத்தட்ட ரூ.74 கோடியை முதலீடு செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் அதானி மிகவிரைவில் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்க முடிந்தது.

நன்றாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்கள், அதானி குழுமத்திடம் தாரை வார்க்கப்பட்டன. தற்போது நீர்குமிழி வெடித்துவிட்டது. சகாரா குழுமத்தின் சுப்ரதா ராய் போல அதானியும் சிறைக்கு செல்ல நேரிடும்.

தாராவி மறுசீரமைப்பு திட்டம்

மும்பை சர்வதேச விமான நிலையத்தின் நடவடிக்கைகளை அதானி குழுமத்திடம் ஒப்படைக்குமாறு ஒரு நிறுவனத்தை நிர்பந்திக்க புலனாய்வு அமைப்புகள் பயன்படுத்தப்பட்டது உலகம் அறிந்த ரகசியம். மராட்டிய துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூட மாநில மின் வினியோக நிறுவனத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்க திட்டமிட்டார். ஆனால் தொழில் சங்கங்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அது நடக்கவில்லை.

மும்பையில் உள்ள தாராவி குடிசை மறுசீரமைப்பு திட்டத்திற்கு துபாயை சேர்ந்த கட்டுமான நிறுவனம் அதிக ஏலம் கேட்டிருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தின் முறைகேடுகளால் அங்கு வசிக்கும் மக்களுக்கும், சிறு தொழில் செய்பவர்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. தாராவி மறு சீரமைப்பு திட்டத்தை அதானி குழுமத்திடம் இருந்து அரசு திரும்பபெற வேண்டும். பங்கு சந்தையில் அதானி குழுமம் மிகப்பெரிய முறைகேட்டை செய்துள்ளது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story