வீடியோ காலில் ஆடையை கழற்றி போட்டு ஆபாசமாக தோன்றிய பெண்


வீடியோ காலில் ஆடையை கழற்றி போட்டு ஆபாசமாக தோன்றிய பெண்
x
தினத்தந்தி 31 May 2023 7:15 PM GMT (Updated: 1 Jun 2023 5:52 AM GMT)

மும்பை,

வீடியோ காலில் ஆடையை கழற்றி போட்டு ஆபாசமாக தோன்றிய பெண்ணால் கார்பரேட் நிறுவன ஆலோசகர் ரூ.6½ லட்சத்தை இழந்தார்.

வீடியோ காலில் வந்த பெண்

தானே நகரை சேர்ந்த 39 வயது நபர் கார்பரேட் நிறுவன ஆலோசகராக உள்ளார். இவருக்கு கடந்த மார்ச் 17-ந் தேதி வீடியோ கால் அழைப்பு வந்தது. அதில் பெண் தோற்றினார். அந்த பெண் கார்பரேட் நிறுவன ஆலோசகரிடம் பேசிக்கொண்டு இருந்தபோது, திடீரென தனது ஆடையை கழற்றி விட்டு ஆபாசமாக காட்சி அளித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த கார்பரேட் நிறுவன ஆலோசகர் வீடியோ கால் இணைப்பை துண்டித்து விட்டார். சிறிது நேரத்திற்கு பிறகு அவருக்கு ஆபாச பெண்ணின் வீடியோ வந்தது. மேலும் ஆபாச பெண்ணுடன் அவர் பேசுவது போல சில ஸ்கிரீன் ஷாட்டுகளும் இருந்தன. அவற்றை உடனடியாக அந்த நபர் நீக்கினார்.

இந்தநிலையில் மறுநாள் அவருக்கு ஒருவர் போன் செய்து தன்னை டெல்லி போலீஸ் கமிஷனர் என அறிமுகப்படுத்தி கொண்டார். சம்பந்தப்பட்ட பெண் விபசார தொழில் செய்து வருவதால், நாங்கள் அவரை தேடிவருகிறோம். இது தொடர்பாக விசாரித்த போது, உங்களது வீடியோ சிக்கி உள்ளது. அது சமூகவலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட இருக்கிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டுமானால் தான் கூறும் நபரிடம் பேசும்படி தெரிவித்தார்.

ரூ.6½ லட்சம் பறிப்பு

அதன்படி கார்பரேட் நிறுவன ஆலோசகர் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டார். அப்போது ரூ.50 ஆயிரம் தந்தால், அந்த வீடியோவை பதிவேற்றம் செய்யவிடாமல் பார்த்து கொள்வதாக கூறினார். தன்னை பற்றி சமூக வலைதளத்தில் ஆபாச அவதூறு பரவி விடுமோ என்று பயந்த கார்பரேட் நிறுவன ஆலோசகர் சம்பந்தப்பட்ட நபருக்கு ரூ.50 ஆயிரத்தை அனுப்பி வைத்தார். பின்னர் இது தொடர்பாக கூறி மீண்டும் மீண்டும் ஒரு கும்பல் மிரட்டி அவரிடம் பணம் பறித்து வந்தது. இவ்வாறு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை இழந்துள்ளார்.

பின்னர் இந்த மோசடி குறித்து அவர் காசர்வடவலி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் 15 மர்ம நபர்கள் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story