மாடல் அழகி கற்பழிப்பு புகார்

பலாத்காரம் செய்து, மதம்மாற கட்டாயப்படுத்தியதாக மாடல் ஏஜென்சி உரிமையாளர் மீது மும்பையை சேர்ந்த மாடல் அழகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மும்பை,
பலாத்காரம் செய்து, மதம்மாற கட்டாயப்படுத்தியதாக மாடல் ஏஜென்சி உரிமையாளர் மீது மும்பையை சேர்ந்த மாடல் அழகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
மாடல் அழகி
மும்பையை சேர்ந்த 23 வயது மாடல் அழகி ஒருவர் தன்வீர் அக்தர் லேக் (40) என்பவர் மீது வெர்சோவா போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
நான் கடந்த 2020-ம் ஆண்டு தன்வீர் அக்தர் லேக்கின் மாடல் ஏஜென்சியில் சேர்ந்தேன். முதலில் அவர் எனது பெயர் யாஸ் என்று என்னிடம் அறிமுகப்படுத்திக் கொண்டார். 4 மாதங்களுக்கு பிறகு அவரது உண்மையான பெயர் தன்வீர் அக்தர் லேக் என்பது எனக்கு தெரியவந்தது. நாங்கள் சில மாதங்கள் ஒன்றாக பழகிவந்தோம்.
பலாத்காரம்
இந்தநிலையில் என்னை அவர் ராஞ்சிக்கு அழைத்து சென்றார். அப்போது அவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் அவர் என்னை இஸ்லாம் மதத்திற்கு மாற கூறி அழுத்தம் கொடுத்தார். பிறகு மும்பையில் இருந்தபோது என்னை கொலை செய்யவும் முயன்றார். இவ்வாறு அவர் புகாரில் கூறியுள்ளார்.
மேலும் "தி கேரளா ஸ்டோரி" படத்தை பார்த்த பிறகு தனக்கு போலீசில் புகார் அளிக்க தைரியம் வந்ததாகவும் அவர் புகாரில் தெரிவித்து இருந்தார்.
வழக்குப்பதிவு
வெர்சோவா போலீசார் அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் தன்வீர் அக்தர் லேக் மீது கற்பழிப்பு மற்றும் அது தொடர்புடைய பிற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு ராஞ்சி போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்தநிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளான தன்வீர் அக்தர் லேக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "புகார் கொடுத்த பெண் எனது நிர்வாண புகைப்படத்தை எனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரப்பினார். மேலும் எனது தரவுகளையும் திருட முயற்சி செய்தார்" என்று கூறியுள்ளார்.