ரூ.23 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது


ரூ.23 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

அரசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.23 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் சம்பாஜி நகரில் கைது செய்தனர். ஆஸ்பத்திரிக்கு வந்த அவரை போலீசார் டாக்டர் வேடத்தில் சென்று மடக்கி பிடித்தனர்.

லாத்தூர்,

அரசின் வங்கி கணக்கில் இருந்து ரூ.23 கோடி மோசடி செய்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் சம்பாஜி நகரில் கைது செய்தனர். ஆஸ்பத்திரிக்கு வந்த அவரை போலீசார் டாக்டர் வேடத்தில் சென்று மடக்கி பிடித்தனர்.

ரூ.22.87 கோடி முறைகேடு

மாநில அரசின் ஜல்யுக்த் ஷிவர் அபியான் நீர் சேமிப்பு திட்டத்தின் கீழ் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் லாத்தூர் மாவட்ட தாசில்தார் பரண்டேகர் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி வழங்க 2 காசோலைகளை அலுவலர்களுக்கு வழங்கினார். இந்த காசோலையை வங்கியில் சமர்ப்பித்த போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. வங்கியில் ரூ.96 ஆயிரம் மட்டும் இருப்பு இருந்ததாக தெரியவந்தது.

இதனை தொடர்ந்து அலுவலகத்தில் நடத்தப்பட்ட தணிக்கையில் நீர்சேமிப்பு திட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.22 கோடியே 87 லட்சம் முறைகேடு செய்யப்பட்டது தெரியவந்தது.

2 பேர் சிக்கினர்

இதுபற்றி தாசில்தார் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையில் போலி கையெழுத்து மூலம் அரசின் வங்கி கணக்குகளில் இருந்து ரூ.22 கோடியே 87 லட்சம் முறைகேடாக மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டதாக தெரிவித்து இருந்தார். இதுகுறித்து போலீசார் கடந்த ஜனவரி மாதம் வழக்கு பதிவு செய்தனர்.விசாரணையில், கலெக்டர் அலுவலகத்தில் எழுத்தராக பணியாற்றிய மனோஜ், அவரது சகோதரர் அருண் மற்றும் சந்திரகாந்த் கோக்டே ஆகியோர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் மனோஜ் மற்றும் சந்திரகாந்த் ஆகியோரை கைது செய்தனர்.

மேலும் ஒருவர் கைது

தலைமறைவாக உள்ள அருண் என்பவரை பிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சம்பாஜி நகரில் உள்ள ஆஸ்பத்திரியில் உறவினரை சந்திக்க அருண் வரவுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன்பேரில் போலீசார் டாக்டர்கள் போல உடையணிந்து கண்காணித்து வந்தனர். இந்தநிலையில் அங்கு வந்த அருணை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது 3-வதாக அருணை போலீசார் கைது செய்து உள்ளனர்.


Next Story