ஷிண்டே அணியை சேர்ந்தவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்- சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகிறார்


ஷிண்டே அணியை சேர்ந்தவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்- சஞ்சய் ராவத் எம்.பி. கூறுகிறார்
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவர்கள் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவுடன் தொடர்பில் இருப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மும்பை,

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவை சேர்ந்தவர்கள் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவுடன் தொடர்பில் இருப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

சாம்னா கட்டுரை

முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி அரசுக்கு எதிராக ஏக்நாத் ஷிண்டே அணி போர்க்கொடி உயர்த்தியதால் சிவசேனா 2 ஆக உடைந்தது. சிவசேனா கட்சி உத்தவ் தாக்கரே தலைமையில் ஒரு அணியாகவும், முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் மற்றொரு அணியாகவும் பிரிந்து உள்ளது. கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை ஏக்நாத் ஷிண்டே அணிக்கு சென்றுள்ளது.

இந்த நிலையில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா அணியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான கட்டுரையில், "பா.ஜனதா கட்சியினர் மாற்றாந்தாய் மனப்பான்மை காரணமாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியை சேர்ந்த 22 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 9 எம்.பி.க்கள் அதிருப்தியில் உள்ளனர். ஷிண்டே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் பா.ஜனதா கூண்டில் அடைக்கப்பட்ட கோழிகள் மற்றும் சேவல்கள் போன்றவர்கள். அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பலியிடப்படலாம்" என்று அதில் கூறப்பட்டு இருந்தது

பா.ஜனதாவின் நிலைப்பாடு

இந்தநிலையில் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா அணியை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி. பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது ஷிண்டே தலைமையில் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனாவுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதில் அளித்து சஞ்சய் ராவத் எம்.பி. கூறியதாவது:-

இந்த தொடர்பு எப்போதும் இருக்கும். ஷிண்டே அணியை சேர்ந்தவர்கள் தங்கள் குறைகளை எங்களிடம் கூறுகின்றனர். ஆனால் அதை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்வது சரியானது இல்லை. அவர்கள் உத்தவ் தாக்கரேவை விட்டு விலகி தவறு செய்து விட்டனர். அதற்கான பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே குழுவில் உள்ளவர்கள் பா.ஜனதா சின்னத்தில் போட்டியிட வேண்டும். இதுவே பா.ஜனதாவின் நிலைப்பாடு ஆகும். இதுகுறித்த தகவல் எங்களுக்கு கிடைத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story