ஆஸ்பத்திரி அருகே குடோனில் பயங்கர தீ; கரும்புகையால் 19 நோயாளிகள் வெளியேற்றம்


ஆஸ்பத்திரி அருகே குடோனில் பயங்கர தீ; கரும்புகையால் 19 நோயாளிகள் வெளியேற்றம்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக 19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புனே,

குடோனில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏற்பட்ட கரும்புகை காரணமாக 19 நோயாளிகள் வெளியேற்றப்பட்டு, வேறு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

தீ விபத்து

புனே அருகே பிம்பிரி சிஞ்ச்வாட் காசர்வாடி பகுதியில் தனியார் ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரியின் அருகே பழைய பொருட்கள் அடங்கிய குடோன் உள்ளது. இந்த குடோனில் நேற்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை யாரும் கவனிக்காததால் குடோனில் இருந்த பொருட்கள் மீது தீ பற்றி எரிய தொடங்கியது. மேலும் அருகே புல்வெளிகள் மீது பற்றியதால் ஆஸ்பத்திரி வளாகத்தின் சுவர் ஓரமாக தீ கொழுந்து விட்டு எரிய தொடங்கியது.

இதனை அறிந்த ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

19 நோயாளிகள் மாற்றம்

இதற்கிடையே தீ விபத்து காரணமாக அங்கு ஏற்பட்ட கரும்புகை ஆஸ்பத்திரியின் உள்ளே சூழ்ந்தது. இதனால் அங்கு அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளுக்கும் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஆஸ்பத்திரியில் அவசர வார்டு பிரிவில் இருந்த 19 நோயாளிகளை ஆம்புலன்சு மூலம் ஏற்றி மற்றொரு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தீயணைப்பு படையினர் 14 வாகனங்களில் விரைந்து வந்தனர். குடோனில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அதிகாலை 5 மணி அளவில் வீரர்கள் போராடி அங்கு பற்றிய தீயை அணைத்தனர். இது பற்றி நடத்திய விசாரணையில் குடோனில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என அதிகாரி தெரிவித்தார். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என அவர் தெரிவித்தார்.



Next Story