மறுசீரமைப்பு பணிகள் தாராவியின் அடையாளத்தை அழித்துவிடும்- குடிசைப்பகுதி மக்கள் கவலை


மறுசீரமைப்பு பணிகள் தாராவியின் அடையாளத்தை அழித்துவிடும்- குடிசைப்பகுதி மக்கள் கவலை
x
தினத்தந்தி 30 Nov 2022 6:45 PM GMT (Updated: 2022-12-01T00:17:18+05:30)

மறுசீரமைப்பு பணிகள் தாராவியின் அடையாளத்தை அழித்துவிடும் என்று குடிசைப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

நாட்டின் நிதிதலைநகர் மும்பைக்கு மத்தியில் உள்ள ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதி தாராவி.

சிறுதொழில்கள்

மிகவும் மக்கள் அடர்த்தி நிறைந்த இந்த பகுதியில் பல சிறுதொழில்களும் நடந்து வருகிறது. குறிப்பாக மருந்து பொருட்கள், தோல், காலணி, உடைகள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான தொழில்களின் மையமாக உள்ளது.

மேலும் தாராவி குடிசை பகுதி சர்வதேச அளவில் புகழ்பெற்ற இடம் என்பதால் வெளிநாட்டில் இருந்து கூட இந்த குடிசை பகுதியை சுற்றிப்பார்க்க வருகின்றனர்.

இப்படி பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த குடிசை பகுதியை சீரமைப்பதற்கான திட்டம் கடந்த 30 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது.

முழு முனைப்பு

கடந்த பா.ஜனதா ஆட்சியில் தாராவி சீரமைப்பு திட்டம் தொடங்கப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் துபாய் நிறுவனத்துக்கு வழங்கிய சீரமைப்பு திட்டப்பணிக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டது. அதன்பிறகு தாராவி சீரமைப்பு திட்டப்பணிகள் முடங்கியது.

இந்த நிலையில் தற்போது ஆட்சியில் உள்ள முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மாநில அரசு திட்டத்தை செயல்படுத்துவதில் முழு முனைப்பு காட்டி வருகிறது.

புத்துயிர் பெற்ற திட்டம்

ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், சுமார் 2.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தாராவியில், 6½ லட்சம் குடிசை பகுதி மக்கள் 7 ஆண்டுகளுக்குள் மறுவாழ்வு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ரூ.5 ஆயிரத்து 69 கோடிக்கான திட்டப்பணிகள் அதானி நிறுவனத்திற்கு டெண்டர் மூலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் முடங்கி கிடந்த மறுசீரமைப்பு பணி மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.

ஆனால் இந்த திட்டம் தாராவியில் வாழும் பலருக்கும் அச்சத்தை தான் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து தாராவி நாக்ரிக் சேவா சங்கத்தை நடத்தி வரும் பால் ரபேல் கூறியதாவது:-

சிறுதொழில்கள் பாதிக்கும்

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி நிலம் அதானி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. தாராவியில் ஆயிரக்கணக்கான குடிசைகள் உள்ளன. ஒவ்வொரு குடிசையிலும் 4 அல்லது 5 குடும்பங்கள் வசிக்கின்றன. மறுசீரமைப்பு பணிக்கு பிறகு அவர்களுக்கு ஒரே ஒரு பிளாட் மட்டுமே கிடைக்கும். இது அவர்களுக்கு போதுமானதாக இருக்காது.

தாராவியில் ஏராளமான குடிசை தொழில், சிறு தொழில் உள்ளன. சீரமைப்பு பணிக்கு பின்பு உப்பு தின்பண்டங்கள், தோல் பொருட்கள், எம்பிராய்டரி செய்யப்பட்ட ஆடைகள், கவரிங் நகைகள் போன்ற உற்பத்தி செய்வது முடியாமல் போகும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

தாராவியில் வசித்துவரும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இட்லி விற்பனையாளர்கள் மும்பை முழுவதும் சுற்றித்திரிந்து தங்கள் வியாபாரத்தை செய்து வருகின்றனர். இவர்கள் பாதிப்படைவார்கள் என்று கூறப்படுகிறது.

சொத்து மதிப்பு அதிகரிக்கும் என்பதால் இவர்களில் பெரும்பாலானோர் தங்கள் சொத்தை விற்றுவிட்டு அங்கிருந்து வெளியேற வாய்ப்பும் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தனிப்பட்ட லாபம்

தாராவியில் உள்ள சாஸ்திரி நகரில் வசிக்கும் மகேஷ் அங்குஷ் காவ்லே கூறுகையில், "தேர்தல் நெருங்கி வருவதால் உள்ளூர் மக்களின் உணர்வுகளுடன் விளையாட அரசியல்வாதிகள் மற்றும் கட்டுமான அதிபர்கள் இந்த இடத்திற்கு வர தொடங்கி உள்ளனர்.

சுமார் 18 மொழிகளை பேசும் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் மக்கள் இங்கு வசிக்கிறார்கள். தாராவி 600 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. இது மும்பையில் உள்ள முக்கிய இடம். அருகில் 5 ரெயில் நிலையங்கள் உள்ளன. இந்த மறுசீரமைப்பு திட்டம் உள்ளூர் மக்களின் நலனுக்கானது இல்லை. சில தனிநபர்களின் தனிப்பட்ட லாபத்திற்காக மேற்கொள்ளப்படுகிறது" என்றார்.

திட்டமிட்டபடி திட்டம் நடக்கவேண்டும்

தாராவி பச்சாவோ அந்தோலன் அமைப்பின் தலைவர் ரமாகாந்த் குப்தா கூறுகையில், "மறுசீரமைப்பு பணிகளை திட்டமிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும். தாராவி மறுவாழ்வு திட்டத்திற்கு 2004-ம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எதுவும் நடக்கவில்லை. 1995-ம் ஆண்டு குடிசைப்பகுதியில் 57 ஆயிரம் குடிசைகள் இருந்தன. ஆனால் இப்போது இந்த எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. தற்போது சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் குடிசைகள் இருக்கலாம் என்று நாங்கள் கருதுகிறோம்.

தாராவியில் வசிப்பவர்களில் 50 சதவீதம் பேர் தங்கள் வீடுகளில் இருந்து சிறுதொழில்களை நடத்துகிறார்கள். மக்கள் தொகை சுமார் 12 லட்சம் இருக்கும். அரசின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் சரியான நேரத்திற்குள் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும்" என்றார்.

சுற்றுலா பயணிகள்

இதேபோல தாராவியை சேர்ந்த அய்யூப் சேக் கூறுகையில், "பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான வெளிநாட்டினர் தாராவிக்கு சுற்றுலா பயணிகளாக வருகை தருகின்றனர்.

ஆனால் சீரமைப்பு பணிகளுக்காக குடிசைகள் இடிக்கப்பட்டதும், தாராவி அதன் கவர்ச்சியையும், சர்வதேச அடையாளத்தையும் இழக்கும். மறுசீரமைப்பு பணி தொடங்கினால் தாராவி மக்கள் மும்பையை விட்டு வெளியேறுவார்கள்" என்றார்.

தாராவியில் வசித்து அங்கு கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக பழம் விற்பனை செய்துவரும் 70 வயதான உஷா பாய், மறுசீரமைப்பு திட்டத்திற்கு அதிருப்தி தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "இப்போது நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இந்த திட்டத்தில் எதிர்காலத்தில் எங்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பது எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.

மத தலங்கள்

தாராவியில் வசிக்கும் ராஜாராம் உபாத்யாய் என்பவர் கூறுகையில், "தாராவியில் நூற்றுக்கணக்கான மத தலங்கள் உள்ளன. அவற்றின் நிலை என்னவாகும் என்று தெரியவில்லை.

இந்த நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் அனைவருக்கும் சரியான இடவசதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.


Next Story