சிவசேனா யாருக்கு சொந்தம்?-தேர்தல் ஆணையத்தில் 2 அணிகளும் இறுதி வாதம் தாக்கல்


சிவசேனா யாருக்கு சொந்தம்?-தேர்தல் ஆணையத்தில் 2 அணிகளும் இறுதி வாதம் தாக்கல்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

யார் உண்மையான சிவசேனா என்ற வழக்கில் உத்தவ், ஷிண்டே அணிகள் தங்கள் இறுதி வாதத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து உள்ளன. இதனால் விரைவில் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

மும்பை,

யார் உண்மையான சிவசேனா என்ற வழக்கில் உத்தவ், ஷிண்டே அணிகள் தங்கள் இறுதி வாதத்தை தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்து உள்ளன. இதனால் விரைவில் முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

2 ஆக உடைந்த சிவசேனா

பால்தாக்கரேவால் தொடங்கப்பட்ட சிவசேனா கட்சி கடந்த ஆண்டு ஜூன் மாதம் 2 ஆக உடைந்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரேக்கு எதிராக அதிருப்தி அணியை உருவாக்கினார். அவருக்கு ஆதரவாக 40-க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள், 13 எம்.பி.க்கள் உள்ளனர். அவர் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பா.ஜனதா ஆதரவுடன் மாநில முதல்-மந்திரியாக உள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே அணியில் தான் பெரும்பாலான எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். உத்தவ் தாக்கரே அணியில் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2 பேரும் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என கூறி வருகின்றனர்.

இறுதி வாதம் தாக்கல்

இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடந்து வருகிறது. உத்தவ் தாக்கரே தலைமையிலான அணி சிவசேனா உத்தவ் பாலாசாகேப் தாக்கரே என்ற பெயரிலும், ஏக்நாத் ஷிண்டே அணி பாலாசாகிபஞ்சி சிவசேனா என்ற பெயரிலும் செயல்பட்டு வருகிறது. சிவசேனாவின் வில், அம்பு சின்னமும் முடக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் யார் உண்மையான சிவசேனா என்ற வழக்கில் இரு அணிகளும் தங்கள் இறுதி வாதங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தன. அவர்கள் தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதற்கான இறுதி ஆவணங்களையும், வாதங்களையும் தாக்கல் செய்து உள்ளனர். ஏற்கனவே வழக்கின் விசாரணை முடிந்து விட்டது. எனவே தேர்தல் ஆணையம் விரைவில் முடிவை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 27-ந் தேதி புனேயில் உள்ள கஸ்பா பேத், சிஞ்வட் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் ஆணையத்தில் இறுதி வாதம் தாக்கல் செய்யப்பட்டது தொடர்பாக ஷிண்டே அணியை சேர்ந்த ராகுல் செவாலே எம்.பி. கூறுகையில், "தேர்தல் ஆணையம் விரைவில் தனது தீர்ப்பை அறிவிக்கும் என நம்புகிறோம்" என்றார்.


Next Story