இன்ப அதிர்ச்சியும்.. எதிர்மறை விமர்சனமும்..


இன்ப அதிர்ச்சியும்.. எதிர்மறை விமர்சனமும்..
x

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஷரத்தா ஷெலார் சகோதரனின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லையே என்ற மன கவலை அவரை வாட்டி இருக்கிறது.

வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தங்கள் குடும்ப விழாக்களில் பங்கேற்க முடியாமல் தவிப்பதுண்டு. அப்படி தவிப்புக்குள்ளான பெண் ஒருவர், இறுதி நேரத்தில் விமானம் ஏறி வந்து தனது சகோதரனின் திருமணத்தில் பங்கேற்று இன்ப அதிர்ச்சி கொடுத்த நிகழ்வு சமூகவலைத்தளங்களில் வைரலாகி இருக்கிறது. கூடவே, அந்த பெண்ணின் திடீர் பயணம் விவாத பொருளாகவும் மாறி இருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த ஷரத்தா ஷெலார் என்ற பெண் பணி நிமித்தமாக இங்கிலாந்தில் குடியேறி இருக்கிறார். அவரது சகோதரனுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட, உடனே நாடு திரும்ப முடியாத நிலை அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. தன்னால் சகோதரனின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லையே என்ற மன கவலை அவரை வாட்டி இருக்கிறது. நெடுந்தொலைவில் வசித்தாலும் அவரது நினைவுகளெல்லாம் சகோதரனின் திருமண நிகழ்வுகளை பற்றியே சூழ்ந்திருக்க அது பற்றி சக ஊழியர்களுடன் கலந்து பேசி இருக்கிறார்.

அவர்கள் திருமணத்தில் பங்கேற்க செல்லுமாறு கூற, உடனே விமானத்தில் புக்கிங் செய்திருக்கிறார். தான் திருமணத்திற்கு வருகை தரும் விஷயத்தை அவரது சகோதரருக்கு தெரியப்படுத்தியும் இருக்கிறார். ஆனால் அவரோ, தனது குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சகோதரியின் பயணம் அமையட்டும் என்று தீர்மானித்திருக்கிறார். அதனால் சகோதரியின் வரவு பற்றி யாருக்கும் தெரிவிக்கவில்லை.

ஷரத்தா ஷெலார், திருமண வருகை பற்றிய பயணத்தை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு விட்டார். ''நீங்கள் எங்கிருந்தாலும் குடும்பம் மிகவும் முக்கியமானது. எந்தவொரு சூழ்நிலையிலும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை நான் உணர்கிறேன்'' என்று பதிவிட்டு அந்த வீடியோவை பகிர்ந்திருக்கிறார். ஷரத்தா ஷெலார் விமானத்தில் ஏறி பயணிக்கும் காட்சிகளுடன் அந்த வீடியோ காட்சி தொடங்குகிறது. திருமண சடங்குகள் நடந்து கொண்டிருக்க ஷரத்தா மண்டபத்துக்குள் நுழைகிறார்.

மணமேடையில் இருக்கும் அவரது தந்தையும், தாயும் மகளை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதித்தபடி கூக்குரலிடுகின்றனர். அதற்குள் ஷரத்தா மணமேடையில் ஏறி தனது சகோதரனை ஆரத்தழுவி அன்பை பொழிகிறார். அனைவரின் கவனமும் மணமகன்-சகோதரரின் மீது திரும்புகிறது. சகோதரி இன்ப அதிர்ச்சி கொடுப்பதாக கருதினாலும் அது எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.

''இது மணமகளின் நாள் மற்றும் உங்கள் சகோதரரின் நாள் என்று நீங்கள் நினைக்கவில்லையா. திருமண நாளில் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வெளிச்சத்தையும், கவனத்தையும் நீங்கள் திருடுவது நியாயமா? இந்த ஆச்சரியத்தை முற்றிலும் பொருத்தமற்றதாக உணர்ந்தேன்'' என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். இதேபோல் பலரும் எதிர்மறையான விமர்சனங்களை பதிவு செய்துள்ளனர். தனது சகோதரனின் திருமணத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அவரது முயற்சியை சிலர் பாராட்டவும் செய்திருக்கிறார்கள்.


Next Story