7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில அடைப்பு


7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில அடைப்பு
x
சேலம்

சேலத்தில் கொலை, திருட்டு வழக்கில் தொடர்புடைய 7 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை வழக்கு

சேலம் அன்னதானப்பட்டி அம்பாள் ஏரி ரோட்டை சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரை முன்விரோதம் காரணமாக கடந்த மாதம் 3-ந் தேதி 6 பேர் அவரது வீட்டில் இருந்து அழைத்து சென்று பீர் பாட்டிலால் தலையில் தாக்கியும், கழுத்தை அறுத்தும் கொலை செய்தனர். இந்த வழக்கில் ஓமலூரை சேர்ந்த புகழ் (வயது 23), சங்ககிரியை சேர்ந்த மகேந்திர பூபதி (23), சேலம் குகையை சேர்ந்த மணிகண்டன் (33), அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியை சேர்ந்த குணசேகரன் (30), தாதகாப்பட்டியை சேர்ந்த மதன்குமார் (26), உடையாப்பட்டியை சேர்ந்த மணி என்கிற மணிகண்டன் (28) ஆகியோரை அம்மாப்பேட்டை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல், கடந்த மாதம் 27-ந் தேதி உடையாப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த லோகேஸ்வரன் என்பவரை மணி என்கிற மணிகண்டன் கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்த புகாரில் அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

குண்டர் சட்டத்தில் கைது

மேலும், குகை கருங்கல்பட்டியை சேர்ந்த துரைராஜ் என்பவருக்கு சொந்தமான உடற்பயிற்சி கூடத்திற்குள் தாதகாப்பட்டி மூணாங்கரடு பகுதியை சேர்ந்த குணசேகர் (25), அத்துமீறி நுழைந்து 100 கிலோ எடையுள்ள இரும்பு பொருட்களை திருடி சென்றுள்ளார். இதுதவிர, பூபதி என்பவரை வழிமறித்து கத்திமுனையில் மிரட்டி ரூ.6 ஆயிரத்தையும் பறித்து சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

சேலம் மாநகரில் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற தொடர்ந்து குற்றச்சம்பங்களில் ஈடுபட்டு வந்ததாக புகழ், மகேந்திரபூபதி, மணிகண்டன், குணசேகரன், மதன்குமார், மணி என்கிற மணிகண்டன் மற்றும் குணசேகர் ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு போலீஸ் கமிஷனருக்கு அன்னதானப்பட்டி போலீசார் பரிந்துரை செய்தனர். இதையடுத்து அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து நேற்று கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார். அதன்பேரில் அவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story