வைகை தண்ணீர் கண்மாய், ஊருணிகளுக்கு செல்லும் வகையில் நிரந்தர திட்டம் தேவை-விவசாயிகள் எதிர்பார்ப்பு


ஆண்டுதோறும் ராமநாதபுரத்திற்கு வரும் வைகை தண்ணீரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் கொண்டு செல்ல பாசன வசதிகள் செய்தால் செழிப்பான மாவட்டமாக ராமநாதபுரம் மாறும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

ராமநாதபுரம்


ஆண்டுதோறும் ராமநாதபுரத்திற்கு வரும் வைகை தண்ணீரை மாவட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் கொண்டு செல்ல பாசன வசதிகள் செய்தால் செழிப்பான மாவட்டமாக ராமநாதபுரம் மாறும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

வறண்ட மாவட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் மிகவும் வறண்ட மாவட்டம். வைகை தண்ணீர் மற்றும் வடகிழக்கு பருவமழை சீசனில் பெய்யும் மழை தான் இந்த மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருக்கிறது. ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்து தான் இந்த மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் விவசாய பணிகளை தொடங்குகின்றனர். வறண்ட மாவட்டம் என்று ராமநாதபுரம் மாவட்டம் அழைக்கப்பட்டு வந்தாலும் இதை செழிப்பான மாவட்டமாக மாற்றுவதற்கு பல வழிகள் இருந்தும் அதை அதிகாரிகள் சரியான முறையில் செயல்படுத்தவில்லை.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனானது கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியது. பருவமழை சீசன் தொடங்குவதற்கு முன்பு வரை மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வந்த நிலையிலும் சீசன் தொடங்கிய பின்னர் மாவட்டத்தில் பரவலாகவே மழை பெய்யவில்லை. இதனால் மாவட்டத்தில் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பருவ மழை

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கூறும்போது, ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பருவமழை சீசனில் தான் ஓரளவு நல்ல மழை பெய்யும். கடந்த 2 ஆண்டுகளாகவே பருவமழை சீசனில் அதிக அளவு மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு மழை தாமதமாக தொடங்கினாலும் அதிக அளவு பெய்தது. ஆனால் இந்த ஆண்டும் மழை இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் நெல் விவசாய பணிகளை தொடங்கினோம்.

பருவமழை சீசன் தொடங்கிய பின்னர் முழுமையாக மழையே பெய்யவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 1 லட்சத்து 35 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள நெல் விவசாயம் முழுமையாக தண்ணீர் இன்றி காய்ந்து கருகிப் போய் விட்டன.

கடலில் கலந்து வீணாகும் தண்ணீர்

மதுரை வைகை அணையில் இருந்து திறக்கப்பட்டு வரும் தண்ணீரானது பார்த்திபனூர் மதகு அணை மற்றும் பரமக்குடி வழியாக ராமநாதபுரம் பெரிய கண்மாய் வந்தடைகிறது. ராமநாதபுரம் பெரிய கண்மாய்க்கு வரும் இந்த வைகை தண்ணீரையோ மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் பாசன வசதிக்காக கொண்டு செல்வதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளோ மாவட்ட நிர்வாகமோ சரியான வழிமுறைகளை மேற்கொள்வது கிடையாது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் வைகை அணையில் இருந்து ராமநாதபுரத்திற்கு தண்ணீர் வந்தும் அந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்து விடும் நிலை தான் இருந்து வருகிறது.

இதற்கு உதாரணமாக கடந்த 2 மாதத்திற்கு முன்பும் ராமநாதபுரம் பெரிய கண்மாய் வரை வந்த வைகை தண்ணீர் 2 வாரத்திற்கு மேலாக கடலுக்கு திருப்பி விடப்பட்டு கடலில் கலந்து வீணானது. இந்த வைகை தண்ணீரை வறண்டு கிடக்கும் பல்வேறு கிராமங்களில் உள்ள கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் கொண்டு சென்று நிரப்பி இருக்கும் பட்சத்தில் அந்த தண்ணீரை வைத்து நெல் விவசாயத்திற்கு பயன்படுத்த வசதியாக இருந்திருக்கும்.

எதிர்பார்ப்பு

பெரிய கண்மாய்க்கு வரும் வைகை தண்ணீரை கண்மாய், ஊருணிகளுக்கும் கொண்டு செல்வதற்கான பாசன வசதிகளை மட்டும் செய்யும்பட்சத்தில் மாவட்டத்தில் ஆண்டு தோறும் 3 போகம் வரையிலும் நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் ஈடுபட முடியும். இருக்கும். வறண்ட மாவட்டம் என்ற பெயரே இல்லாமல் செழிப்பான மாவட்டம் என்று நிலைமையும் மாறிவிடும் அதுதான் உண்மை. இதை அரசை எப்போது தான் செய்யும் என்ற எதிர்பார்ப்பில் தான் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

திட்டமிடல் தேவை

அதனால் வருகின்ற ஆண்டிலிருந்தாவது வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரை ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், சாயல்குடி, கமுதி, கடலாடி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து கண்மாய் மற்றும் ஊருணிகளுக்கும் இந்த வைகை தண்ணீரை கொண்டு சென்று நிரப்ப மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி அதற்கான நிதியை அரசிடம் பெற்று இந்த பணிகளை சரியான திட்டமிடலுடன் செய்ய வேண்டும்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமான கண்மாய் மற்றும் ஊருணிகள் இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு வைகை தண்ணீர் வரத்தால் சுமார் 100-க்கும் குறைவான கண்மாய்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story