சிறுகரும்பூர் ஊராட்சியை முதன்மை ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை


சிறுகரும்பூர் ஊராட்சியை முதன்மை ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுகரும்பூர் ஊராட்சியை முதன்மை ஊராட்சியாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று ஊராட்சி மன்ற தலைவர் கு.தமிழ்செல்வி குணசேகரன் தெரிவித்து உள்ளார்.

ராணிப்பேட்டை

சிறுகரும்பூர் ஊராட்சி

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் சிறுகரும்பூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் சிறுகரும்பூர், சிறுகரும்பூர் காலனி ஆகிய குக்கிராமங்கள் உள்ளன. ஊராட்சி மன்ற தலைவராக அதே பகுதியை சேர்ந்த கு.தமிழ்செல்வி குணசேகரன் உள்ளார். இவர் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஊராட்சியில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

சிறுகரும்பூர், காலனி பகுதியில் ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்தில் புதிய மின்மோட்டார். பைப்லைன், ரூ.85 ஆயிரத்தில் குடிநீர் குழாய்கள், கரும்பாத்தம்மன் கோவில் தெருவில் ரூ.1 லட்சத்து 11 ஆயிரம் மதிப்பில் பைப் லைன், சோளிங்கர் தொகுதி எம்.எல்.ஏ. நிதியில் இருந்து சிறுகரும்பூர் காலனி பகுதியில் ரூ.3 லட்சத்தில் சிமெண்டு சாலை, பிள்ளையார் கோவில் தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பில் சிமெண்டு சாலை, மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து சிறுகரும்பூர், நடுத்தெருவில் ரூ.5 லட்சத்து 70 ஆயிரத்தில் சிமெண்டு சாலை பணிகள் முடிக்கப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

9 பயனாளிகளுக்கு அரசு மூலம் இலவச ஆடு வழங்கப்பட்டுள்ளது. ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் மூலம் உபகரணங்கள் பெற்று தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதம மந்திரியின் குடியிருப்பு திட்டத்தின் மூலம் 18 பயனாளிகளுக்கு இலவச வீடுகள், 18 பயனாளிகளுக்கு தனிநபர் கழிப்பிடம் வழங்கப்பட்டு உள்ளது.

பணிகள் விரைவில் தொடக்கம்

சிறுகரும்பூரில் ரூ.4 லட்சத்து 8 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், பூந்தோட்ட தெருவில் ரூ.5 லட்சத்து 40 ஆயிரத்தில் சிமெண்டு சாலை, ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய், கரும்பாத்தம்மன் கோவில் தெரு, மீவை தெரு, சத்துணவு கூடம் ஆகிய பகுதிகளில் தலா ரூ.13 ஆயிரத்தில் உறிஞ்சி குழி, ரேஷன் கடை அருகே ரூ.1 லட்சத்து 57 ஆயிரத்தில் கழிப்பிடம், சிறுகரும்பூர் ஊராட்சி அலுவலகத்தில் ரூ.1 லட்சத்து 98 ஆயிரத்தில் சுற்றுசுவர், பேவர்பிளாக் சாலை, சிறுகரும்பூர் காலனியில் ரூ.2 லட்சத்து 24 ஆயிரத்தில் கழிவுநீர் கால்வாய் மற்றும் கிடைமட்ட உறிஞ்சி குழி உள்ளிட்ட பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்து உள்ளது. இந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

அங்கன்வாடி மைய கட்டிடம், நூலகம் சீரமைக்கப்பட்டு உள்ளது. சிறுகரும்பூரில் இருந்து வேகாமங்கலம் வரை ரூ.78 லட்சத்தில் தார் சாலை அமைக்க பொதுப்பணித்துறை மூலமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

மேலும் சிறுகரும்பூர் ஊராட்சியில் 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கவும். சிறுகரும்பூர் ஊராட்சியை குடிசையில்லா ஊராட்சியாக மாற்ற 103 பயனாளிகளுக்கு இலவச வீடுகள் வழங்கவும், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் வழங்கப்பட்ட வீடுகளில் சேதமடைந்த வீடுகளின் பயனாளிகளுக்கு அந்த வீட்டை அப்புறப்படுத்திவிட்டு புதிய வீடுகள் வழங்கவும், சிறுகரும்பூர் அருகே நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்கவும் கோரிக்கை வைத்து உள்ளேன்.

முதன்மை ஊராட்சியாக...

ஊராட்சியில் பொது மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பரிசோதனை, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. நான் தினமும் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று மக்களிடம் குறைகளை கேட்பேன். ஊராட்சியில் குறைகள் இருந்தால் அதை மக்கள் தெரிவிப்பதற்கு முன்பாக அதை நான் செய்து கொடுத்து விடுவேன். மேலும் சிறுகரும்பூர் ஊராட்சியில் தடையில்லாமல் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

குடிநீர் குழாய்கள் இல்லாத பகுதிகளில் கூடுதல் குழாய்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளேன். பழுதடைந்த மின் விளக்குகளை உடனுக்குடன் மாற்றி கொடுக்கப்பட்டு உள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறுகரும்பூர் ஊராட்சியை உட்கட்டமைப்பு வசதிகளுடன் முதன்மை ஊராட்சியாக மாற்ற அமைச்சர் ஆர்.காந்தி, ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ., காவேரிப்பாக்கம் ஒன்றியக்குழு தலைவர் கே.அனிதாகுப்புசாமி, துணைத்தலைவர் முனியம்மாள் கணேசன், மாவட்ட கவுன்சிலர் என்.சக்தி, ஒன்றிய கவுன்சிலர் கே.தீபா கார்த்திகேயன் ஆகியோரின் ஒத்துழைப்போடு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சே.மனோஜ்குமார். வார்டு உறுப்பினர்கள் க.ரேவதி கரும்பாத்தை, கே.சிதம்பரம், த.தேவி தணிகைமணி, இ.தனலட்சுமி இளங்கோவன், ஜி.மனோகர், கு.சல்ஜா குமார், மு.மேனகா முனியாண்டி, எஸ்.சத்திரியன் ஆகியோருடன் இணைந்து மாற்றுவேன் என்று தலைவர் கு.தமிழ்செல்வி குணசேகரன் தெரிவித்தார்.


Next Story