குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்: கலெக்டர் செந்தில்ராஜ்


குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்: கலெக்டர் செந்தில்ராஜ்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவிற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கு பக்தர்கள் வசதிக்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரியில் இருந்து கூடுதல் பஸ்கள் இயக்கப்படும் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா

குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா இன்று(திங்கட்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி, 12 நாட்கள் நடைபெற உள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த ஆண்டு பல லட்சம் பகத்ர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் குலசேகரன்பட்டினத்திற்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

திருவிழா நடைபெறும் கோவில் பகுதி, மகிசாசூரசம்ஹாரம் நடைபெறும் கடற்கரை, பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, பக்தர்கள் தரிசனத்துக்கு செல்லும் வழி ஆகியவற்றை பார்வையிட்டார்.

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

2,500 போலீசார் பாதுகாப்பு

தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. பக்தர்களின் வசதிக்காக 3 பொதுதரிசன வழி மற்றும் ஒரு கட்டண வழியும், மாற்று திறனாளிகள், வயதானவர்கள், கை குழந்தை வைத்திருப்பவர்களுக்கு தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணிக்காக இன்று 450 போலீசாரும், அடுத்தமாதம் 4-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை 2 ஆயிரத்து 150 போலீசாரும், 150 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.

கூடுதல் பஸ் வசதி

சுகாதார துறை சார்பில் 6 படுக்கை கொண்ட தற்காலிக ஆஸ்பத்திரி வசதி, 15 மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். 7 இடங்களில் மருத்துவ முகாம் அமைக்கப்படவுள்ளது. 45 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவுள்ளது. பல இடங்களில் தகவல் மையம் அமைக்கப்படும். விழா நாட்களில் 100-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபடுவார்கள். கடைகளில் கழிவு பொருட்களை போட கூடை வைக்க வேண்டும். கடற்கரையில் தற்காலிகமாக 80 கழிப்பிடமும், 4 இ- டாய்லெட் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பஸ்நிலையம், கோவில், கடற்கரையில் குடிநீர் வசதியும், குலசேகரன்பட்டினத்திற்கு நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அப்போது கோவில் நிர்வாக அதிகாரி ராமசுப்பிரமணியன், உடன்குடி பஞ்., யூனியன் ஆணையாளர் ஜாண்சிராணி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

போலீஸ் அதிகாரிகள் ஆய்வு

திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஸ் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன், குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் மற்றும் கோவில் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story