தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை


தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை
x
தினத்தந்தி 31 May 2023 6:45 PM GMT (Updated: 31 May 2023 6:46 PM GMT)

தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

ராமநாதபுரம்

பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர். கடலாடி ஆகிய அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2023-24-ம் ஆண்டுக்கான மாணவ-மாணவிகளின் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி www.skilltraining.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வேண்டும். அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன் 14 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். பெண்களுக்குரிய தொழிற்பிரிவுகளுக்கு வயது வரம்பு இல்லை. மாணவர்களுக்கு உதவும் வகையில் பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், கடலாடி அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான விண்ணப்ப கட்டண தொகை ரூ.50 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்ய கடைசிநாள் 7.6.2023 ஆகும். இதில் சேர விரும்புபவர்கள் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் அரசினர் தொழிற்பயற்சி நிலையங்களுக்கு சென்று இலவசமாக விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேருபவர்களுக்கு அரசு சார்பில் மாதந்திர கல்வி உதவி தொகையாக ரூ.750-ம், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், வரைபட கருவிகள் வழங்கப்படும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புடன் கூடிய பயிற்சி அளிக்கப்படும் என பரமக்குடி அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் குமரவேல் தெரிவித்தார்.


Next Story