வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் இல்லை; மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது- ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தகவல்


வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் இல்லை; மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது- ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தகவல்
x

வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் இல்லை. மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

ஈரோடு

வேட்பாளர் அறிவிப்பில் குழப்பம் இல்லை. மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது என்று ஈரோட்டில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார்.

திருப்பு முனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் கட்சி நிர்வாகிகளுக்கு தேர்தல் களப்பணியாற்றுவது குறித்து அறிவுரை வழங்கி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் என்பது திருப்பு முனையை ஏற்படுத்துவதாக அமையும். வாக்காளர்கள் சரிபார்க்கும் பணி மற்றும் வாக்காளர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியை இன்னும் 2 நாட்களில் முடிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி அன்பு கட்டளையிட்டு இருக்கிறார். நேற்று வரை 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்து இருக்கிறது. மீதமுள்ள பணிகள் விரைவில் முடியும்.

யூகம் வகுப்பார்

வாக்குச்சீட்டு வழங்க அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாக செல்வார்கள். எங்கே வாக்காளர்கள் குடிபெயர்ந்து உள்ளனர் என்ற விவரத்தையும் நாங்கள் சேகரித்து வருகிறோம். பல்வேறு பகுதிகளுக்கு சென்று பாா்த்தவகையில், 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பேர் வேறு இடத்துக்கு சென்றதாக தகவல் வந்துள்ளது. அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றும் ஆய்வு செய்து வருகிறோம்.

முதல்-அமைச்சரின் கருத்துக்கு இந்த சூழ்நிலையில் பதில் சொல்ல தேவையில்லை. மாற்று கட்சியில் இருக்கிற ஆளும் கட்சி, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களின் கருத்துகளுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை. எங்களை பொறுத்தவரை தர்மத்தை காப்பதற்கு குருச்சேத்திர யுத்தத்தில் கிருஷ்ணபரமாத்மா எப்படி தனது யூகத்தை வகுத்தாரோ, அதேபோல கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி யூகத்தை வகுப்பார். வெற்றியை காண்போம்.

வேட்பாளர் அறிவிப்பு

வேட்பாளர் அறிவிப்பில் குழப்பமே கிடையாது. நாளை (அதாவது இன்று) காலை தேர்தல் பணிமனைகள் திறக்கப்படும். அதற்கு பிறகு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. அமைச்சர் பேசியதாக வெளியான வீடியோவை பொறுத்தவரை, ஒவ்வொரு இயக்கத்தை சார்ந்தவர்களும் தவறு நடப்பதை சுட்டி காட்டுவதற்கு உரிமை இருக்கிறது.

வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில், இறந்துபோன 5 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. எனவே வாக்காளர்களின் விவரங்களை நாங்கள் முழுமையாக சேகரித்தபிறகு தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்ப இருக்கிறோம்.

இரட்டை இலை சின்னம்

மக்களை பொறுத்தவரை மாற்றத்தை விரும்புகிறார்கள். சரியான நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தல் முடிவுதான் நாடாளுமன்ற தீர்ப்பை வழங்க இருக்கிறது.

இரட்டை இலை சின்னம் யாருக்கு கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் காண்பீர்கள். தேர்தல் பணிமனை திறந்தாலே எங்களது பணிகள் வேகமாக நடைபெறுவதை காணமுடியும்.

நாங்கள் சரியான நேரத்தில் சரியான முறையில் கோர்ட்டில் பொதுக்குழு தீர்மானங்களை வக்கீல்கள் மூலமாக தாக்கல் செய்து உள்ளோம். எனவே பொறுத்து இருந்து பாருங்கள், மகிழ்ச்சியான தகவலை காணலாம்.

இவ்வாறு கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. கூறினார். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாதவரம் மூர்த்தி, அ.தி.மு.க. ளபகுதி செயலாளர் கே.சி.பழனிசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story