பாலியல் வன்முறைக்கு எதிராக கடலூரில், மினி மாரத்தான் போட்டி கலெக்டர் தொடங்கி வைத்தார்


பாலியல் வன்முறைக்கு எதிராக  கடலூரில், மினி மாரத்தான் போட்டி  கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)

பாலியல் வன்முறைக்கு எதிராக கடலூரில் நடந்த மினி மாரத்தான் போட்டியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர்

கடலூரில் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது மாநில மாநாட்டையொட்டி பாலியல் வன்முறை, போதை பழக்கத்திற்கு எதிராக கடலூரில் மினி மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. கடலூர் டவுன்ஹால் அருகே இருந்து தொடங்கிய இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை, 10-ம் வகுப்பு முதல் கல்லூரி வரை மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ஓடினர். இந்த போட்டி சில்வர் பீச் சாலை, வண்ணாரப்பாளையம் வழியாக சென்று கடலூர் சில்வர் பீச்சை சென்றடைந்தது.

பரிசு

தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது. மாநாட்டு வரவேற்பு குழு செயலாளர் தேன்மொழி வரவேற்றார். மாவட்ட தலைவர் மல்லிகா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவி, குடியிருப்போர் சங்க தலைவர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், ஜனநாயக மாதர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் கிரிஜா, தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா. மூத்த வக்கீல் சிவமணி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மாதவன் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

இதில் குடியிருப்போர் சங்க பொதுச்செயலாளர் மருதவாணன், மக்கள் ஒற்றுமை மேடை மாவட்ட அமைப்பாளர் அமர்நாத், நகர செயலாளர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story