ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்


ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும்நிலையையும் காணமுடிகிறது. இதையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

தேனி

தேனி மாவட்டத்தில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான தெருக்களில் நகராட்சி தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டுசெல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ நகராட்சியே வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.

ஆபத்தை ஏற்படுத்தும்

இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அவ்வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும்கூட ஏற்படுத்திவிடுகின்றன.

தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டுசெல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது.

கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டுசெல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டுசெல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர்.

பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும்நிலையையும் காணமுடிகிறது.

இதையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டும் என்று தேனி மாவட்டத்தை சேர்ந்த பலதரப்பு மக்கள் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

மரங்களை காயப்படுத்துகிறது

ஷேக்முகமது (ஆட்டோ டிரைவர், உத்தமபாளையம்):- தேனி மாவட்டத்தில் நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கேபிள் ஒயர்கள், இணையதள இணைப்பு ஒயர்கள் போன்றவை முறையான வழிகாட்டுதல்களை பின்பற்றி கொண்டு செல்லப்படுவது இல்லை. மரங்கள், மின்கம்பங்கள், போக்குவரத்து சிக்னல்கள் ஆகியவற்றின் வழியாக கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. இதில் மரங்களில் கட்டுக்கம்பிகள் வைத்து ஒயர்கள் கட்டி வைக்கப்படுகின்றன. மாதக்கணக்கில் இவ்வாறு கட்டி வைப்பதால் கட்டுக்கம்பிகள் மரங்களை காயப்படுத்துகிறது. மரங்களின் வளர்ச்சியும் பாதிக்கப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை உருவாக்குகிறது. பல இடங்களில் தாழ்வாக இணைப்புகள் செல்வதால் வாகனங்கள் கடந்துசெல்லும் போது ஒயர்கள் துண்டிக்கப்படுகிறது. இதனால் வீடுகளில் கேபிள் டி.வி. இணைப்பு, இணையதள சேவை கிடைக்காமல் பாதிப்பு ஏற்படுகிறது. எதற்கெல்லாமோ அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோன்று வணிக நோக்கத்தில் ஒயர்களை கொண்டு செல்வதற்கு மரங்களையும், மின்கம்பங்களையும் பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கேபிள் இணைப்பு துண்டிப்பு

பாஸ்கரன் (அச்சக உரிமையாளர், கம்பம்):- கேபிள் டி.வி. இணைப்புகள், இணையதள இணைப்புகள் போன்றவற்றை தனித்தனியாக கம்பங்கள் நடவு செய்து ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், பல இடங்களில் அதை பின்பற்றுவது இல்லை. ஆங்காங்கே இருக்கும் மின்கம்பம், மரங்கள், வீட்டு ஜன்னல்கள் போன்றவற்றின் மீது ஒயர்களை கட்டி, இழுத்துச் செல்லப்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் பராமரிப்பு பணிக்கு மின்கம்பங்களில் ஏறி இறங்கும் போது கேபிள் டி.வி. இணைப்பு துண்டிக்கப்படும் சம்பவங்களும் நடக்கின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் குறுக்கும் நெடுக்குமாக இதுபோன்ற இணைப்பு ஒயர்கள் செல்வதால், வீடுகளுக்கு வீட்டு உபயோக பொருட்களை சரக்கு வாகனங்களில் ஏற்றி வரும் மக்கள் இடையூறுகளை சந்திக்கின்றனர்.

தங்கமணி (குடும்பத்தலைவி, உப்புக்கோட்டை) :- கேபிள் டி.வி. கட்டணம் மாதந்தோறும் தவறாமல் மக்கள் செலுத்துகின்றனர். அந்த கட்டணத்தை வசூல் செய்வதற்கு பணியாளர்கள் வீடு தேடிச் செல்கின்றனர். ஆனால், அதற்கான ஒயர்களை கொண்டு செல்வதற்கு கம்பங்களை போதிய அளவில் நடாமல், மரங்களையும், மின்கம்பங்களையும் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. மழைக் காலத்தில் மரக்கிளை முறிந்து விழுந்தாலோ, மின்வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் நடக்கும் போதோ கேபிள் இணைப்புகள் துண்டிக்கப்படும் சம்பங்கள் நடக்கின்றன. இணையதள இணைப்பும் துண்டிக்கப்படுவதால் வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதுதொடர்பாக கம்பம் நகராட்சி ஆணையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது,'கார்ப்பரேட் நிறுவனங்கள் இணையதள சேவை வழங்குவதற்கு நகர் பகுதியில் ஆங்காங்கே கம்பங்கள் அமைத்துள்ளன. ஆனால், கேபிள் டி.வி. இணைப்பு வழங்குவோர் அதுபோல் பின்பற்றுவது இல்லை. மரங்களை பயன்படுத்தி இணைப்புகளை கொண்டு செல்கின்றனர். மழைக்காலங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தால் ஒயர்கள் துண்டிக்கப்படுகிறது. இதுகுறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்படும் இணைப்புகளை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றி வருகிறோம். வருங்காலங்களில் குடியிருப்பு பகுதிகளிலும் பாதிப்புகள் ஏற்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story