ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்பொதுமக்கள் கருத்து


ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள்பொதுமக்கள் கருத்து
x

ஆபத்தை ஏற்படுத்தும் கேபிள் ஒயர்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சேலம்

சேலத்தில் இணையதளம் உள்பட தனியார் நிறுவனங்களின் சில சேவைகள் கேபிள் இணைப்பு மூலமே வழங்கப்படுகின்றன. அந்த கேபிள்களை முறையாக எடுத்துச்செல்லாததால், இங்கும், அங்கும் தொங்கிக்கொண்டிருக்கும் நிலையை நகரில் பல இடங்களில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலான தெருக்களில் மாநகராட்சி தெரு விளக்கு கம்பங்களை ஆக்கிரமித்துத்தான் தனியார் கேபிள்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இது தனியார் நிறுவனங்களின் கேபிள்களுக்கு ஏதோ மாநகராட்சியே வசதி செய்து கொடுத்ததுபோல இருப்பதாக பலருக்கு ஆதங்கத்தை தருகிறது.

ஆபத்தை ஏற்படுத்தும்

இதை சாதாரணமாக கூறிவிட முடியாது. பல சமயங்களில் இந்த ஒயர்கள் ஆபத்தையும் ஏற்படுத்துகின்றன. சாலைகளில் தொங்கியபடி கிடக்கும் ஒயர்கள் வாகனங்களில் சிக்கும்போது வாகன ஓட்டிகளுக்கும், அந்த வழியாக கடந்து செல்பவர்களுக்கும் அபாயத்தை உண்டாக்குகின்றன. சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தான விபத்துகளையும்கூட ஏற்படுத்தி விடுகின்றன.

தொங்கிக்கிடக்கும் ஒயர்களை முறையாக கவனித்து அகற்றுவது கேபிள்களை கொண்டுசெல்லும் தனியார் நிறுவனங்களின் பொறுப்பு. ஆனால் அந்த நிறுவனங்கள் அதைச் சரிவர செய்வது கிடையாது. கம்பங்களை நட்டு கேபிள்களை கொண்டுசெல்லாமல், மரங்களில் தொங்கவிட்டும், வீடுகளின் மீதும் அனுமதி இல்லாமல் எடுத்துச்செல்கின்றனர். இதில் எத்தனை கேபிள்கள் உரிய அனுமதி பெற்று கொண்டுசெல்லப்படுகின்றன என்பதும் புரியாத புதிர். பல இடங்களில் தனியார் கேபிள்கள் அறுந்து விழுந்து, கேட்பாரற்று வெகுநாட்களாக கிடக்கும் நிலையையும் காணமுடிகிறது. இதையெல்லாம் சீர்ப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். இது குறித்து பொதுமக்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.

இடையூறுகள்

முத்துக்குமார் (அரசிராமணி):-

அரசிராமணி செட்டிபட்டி பாலம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கேபிள் ஓயர்கள் தாழ்வாக செல்கின்றன. மேலும் பல இடங்களில் மின் கம்பங்களை கேபிள் ஒயர்கள் ஆக்கிரமித்து இருப்பதை காணமுடிகிறது. இதேபோல் சென்றாயனூர், பெரமாச்சிபாளையம், சோழக்கவுண்டனூர், வட்ராம்பாளையம், குஞ்சாம்பாளையம், மூலப்பாதை, ஆலச்சம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கேபிள் ஒயர்கள் மிக தாழ்வாக மின் கம்பங்களில் இணைந்தவாறு செல்கிறது. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது ஒயர் பட்டு, தடுமாறி கீழே விழுந்து காயம் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. மின்சார ஒயர்கள் செல்லும் பாதையில் தான் கேபிள் ஒயர் உள்ளிட்ட பல தனியார் செல்போன் டவர்களுக்கு செல்லும் கேபிள் ஒயர்கள் பின்னி பிணைந்தவாறு செல்கிறது. மின்சார ஒயர் செல்லும் கம்பம் வழியாக கேபிள் ஒயர்கள் செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் யாரும் அனுமதி பெறுவதில்லை. எனவே கேபிள் ஒயர்கள் அமைப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும்.

கனரக வாகனங்கள்

ரமேஷ் (அரியாகவுண்டம்பட்டி):-

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில பகுதிகளில் உள்ள சாலைகளின் குறுக்கே பல பகுதிகளில் கேபிள் வயர்கள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த பகுதிகளை கடக்கும் போது மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியவில்லை.

சில இடங்களில் அதிகப்படியான ஒயர்கள் சாலையின் குறுக்கே தாழ்வாக தொங்கிக்கொண்டுள்ளன. இந்த சாலை வழியாக வாகனங்கள் செல்லும் போது கேபிள் ஒயர்கள் அறுந்து விழுந்து விபத்தை ஏற்படுத்துகிறது. மேலும் மழைக்காலங்களில் ஒரே இடத்தில் அதிகமான கேபிள்கள் உள்ளன. எனவே சாலைகளில் மிகவும் தாழ்வாக தொங்கி கொண்டு இருக்கும் கேபிள் ஒயர்கள் அமைப்பதை முறைப்படுத்த வேண்டும்.

வாகன ஓட்டிகள் சிரமம்

கலைச்செல்வி (மோட்டாங்குறிச்சி, கன்னங்குறிச்சி):-

கன்னங்குறிச்சி பகுதியில் மின் கம்பத்தில் மின் கம்பிகளை விட அதிகமாக கேபிள் ஒயர்கள் தான் செல்கிறது. பல இடங்களில் மிகவும் தாழ்வான இடங்களில் தான் கேபிள் ஒயர்கள் செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டு கடக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. கேபிள் வயர்கள் மற்றும் தனியார் செல்போன் டவர்களுக்கான கேபிள் அமைக்கும் போது அந்தந்த நிறுவனத்தினர் கம்பம் பதித்து தாழ்வாக செல்லாதவாறு கேபிள் ஒயர்கள் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொலைக்காட்சி பெட்டி

லோகநாயகி(சேலம்):-

சேலம் நகர் பகுதி மட்டும் அல்லாமல் மாவட்டம் முழுவதும் முன்பெல்லாம் தொலைக்காட்சி பெட்டிக்கான கேபிள் ஒயர்கள் மட்டும் தான் செல்லும். அது ஒரு குறிப்பிட்ட உயரத்தில் தான் செல்லும். ஆனால் சமீபகாலமாக தொலைக்காட்சி கேபிள் ஒயர்கள் மட்டுமின்றி, தனியார் செல்போன் டவர்களுக்கான கேபிள் ஒயர்கள் அதிகம் செல்கின்றன. பல இடங்களில் மிகவும் தாழ்வாகத்தான் செல்கிறது. எனவே கேபிள் ஒயர்கள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவா்கள் கூறினர்.


Next Story