மகாளய அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்


மகாளய அமாவாசையையொட்டி  காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள்  முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்
x

நாமக்கல் மாவட்டத்தில் மகாளய அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் மகாளய அமாவாசையையொட்டி காவிரி ஆற்றில் குவிந்த பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

அசலதீபேஸ்வரர் கோவில்

தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளானது மகாளய அமாவாசையாக இந்துக்களால் கருதப்பட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகிறது. அதன்படி நேற்று நாமக்கல் மாவட்டம் மோகனூர் அசலதீபேஸ்வரர் கோவில் அருகே உள்ள படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.

பின்னர் காவிரியில் நீராடிய பொதுமக்கள் வாழை இலையில் பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து ஆற்றில் பொருட்களை விட்டு முன்னோர்களை வழிபட்டனர். நாமக்கல், சேலம், திருச்சி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நேற்று விடுமுறை நாள் என்பதால் அதிகாலை 4 மணி முதலே குடும்பத்துடன் சென்று தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

முன்னோர்களுக்கு தர்ப்பணம்

இதேபோல் பரமத்திவேலூர் காவிரி ஆற்றில் மகாளய அமாவாசையையொட்டி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அதிகாலை முதலே குவிய தொடங்கினர். இதையடுத்து காவிரியில் நீராடி விட்டு வாழை இலையில் பொருட்கள் வைத்து பூஜை செய்து அதனை தண்ணீரில் விட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதையடுத்து காவிரி கரையில் மயானம்‌ எதிரே ‌உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

காசி விஸ்வநாதர் கோவில் பகுதியில் ஏராளமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க வேலூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story