சதுரகிரியில் இன்று முதல் 13 நாட்களுக்கு தரிசன அனுமதி


சதுரகிரியில் இன்று முதல் 13 நாட்களுக்கு தரிசன அனுமதி
x

பிரதோஷம், மகாளய அமாவாசை, நவராத்திரி திருவிழாவையொட்டி சதுரகிரியில் இன்று முதல் 13 நாட்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

பிரதோஷம், மகாளய அமாவாசை, நவராத்திரி திருவிழாவையொட்டி சதுரகிரியில் இன்று முதல் 13 நாட்களுக்கு தரிசன அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சதுரகிரி கோவில்

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி கோவிலுக்கு சென்று வழிபடுகின்றனர்.

மழைபெய்யும் நாட்களில் ஓடைகளில் வெள்ளப்பெருக்கு இருக்கும் என்பதால் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இந்தநிலையில், புரட்டாசி பிரதோஷம் மற்றும் மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று(வெள்ளிக்கிழமை) முதல் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

நவராத்திரி விழாவிற்கும் அனுமதி

இந்தநிலையில் வருகிற 26-ந் தேதி நவராத்திரி விழா தொடங்குவதால் அதற்கும் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று இன்று(வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை பக்தர்கள் சதுரகிரியில் மலையேறி சாமி தரிசனம் செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதனால் 13 நாட்களுக்கு நாள்தோறும் பக்தர்கள் மலை ஏறிச்சென்று சதுரகிரியில் சாமி தரிசனம் செய்யலாம்.

பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வரும் நிலையில் சில கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது.

கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கு அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோவில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும். மழை பெய்யும் நாட்களில் மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு தொடர்ச்சியாக 13 நாட்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story