காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்


காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் வருகிற 14-ந் தேதி வரை நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு

தடுப்பூசி முகாம்

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தில் கிராம பொருளாதார முக்கிய பங்கு வகிக்கும் நாட்டுக்கோழிகள் மற்றும் பிறவகை கோழிகளுக்கு கோடை காலங்களில் ஏற்படும் வெள்ளைக் கழிச்சல் நோய் பெரும் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. கோழிகளுக்கு ஏற்படும் இந்த வெள்ளை கழிச்சல் நோயினை கட்டுப்படுத்த ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்களிலும், 15 நாட்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவ கிளை நிலையத்திலும், கால்நடை பாதுகாப்பு திட்ட முகாமிலும், கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம், ஒவ்வொரு கிராமந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது.

2 வாரங்கள் முகாம்

இந்த ஆண்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 14-ந் தேதி வரை முகாம் நடக்கிறது. 2 வாரம் நடைபெறும் முகாமில் 2 லட்சத்து 63 ஆயிரம் கோழிகளுக்கு கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி செலுத்தப்பட இருக்கிறது.

எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து பொது மக்களும், இந்த முகாமில் கலந்து கொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு, கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் காரணமாக ஏற்படும் இறப்பினை தவிர்த்து அதிக லாபம் ஈட்டி பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இது தொடர்பான விவரங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்களை அணுக மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது என அதில் கூறப்பட்டிருந்தன.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1 லட்சத்து 61 ஆயிரம் கோழிகளுக்கு இருவார கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் 14-ந் தேதி வரை நடைபெற இருக்கிறது. எனவே, காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோழிகளை வளர்க்கும் அனைத்து பொதுமக்களும், இந்தமுகாமில் கலந்துகொண்டு தங்களது கோழிகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டு, இறப்பினை தவிர்த்து அதிக இலாபம் ஈட்டி பயன்பெற கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story