வன்னியர் சங்கம் சார்பில் மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு; அன்புமணி ராமதாஸ் ஆய்வு


வன்னியர் சங்கம் சார்பில் மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு; அன்புமணி ராமதாஸ் ஆய்வு
x

வன்னியர் சங்கம் சார்பில் வருகிற மே 5-ந்தேதி சித்திரை முழு நிலவு மாநாடு நடக்கிறது. இதற்காக மாமல்லபுரம் அருகே உள்ள திருவிடந்தையில் தேர்வு செய்யப்பட்ட மைதானத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் பார்வையிட்டார்.

செங்கல்பட்டு

சித்திரை முழு நிலவு மாநாடு

பா.ம.க. மற்றும் வன்னிர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்தது. மாமல்லபுரத்தில் இடவசதியின்மை மற்றும் தொல்லியல் துறை தடை உத்தரவு காரணமாக இந்த சித்திரை முழு நிலவு மாநாடு 2013-ம் ஆண்டிற்கு பிறகு கடந்த 10 வருடங்களாக நடத்தப்படவில்லை.

தற்போது பா.ம.க. தங்களது கட்சியின் பலத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையிலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் சித்திரை முழு நிலவு மாநாட்டினை தமிழக அளவில் தொண்டர்களை அதிகளவில் திரட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அன்புமணி ராமதாஸ் ஆய்வு

மாமல்லபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலையில் உள்ள திருவிடந்தை கிழக்கு கடற்கரை சாலையில் பக்கிங்காம் கால்வாய் ஓரம் உள்ள 200 ஏக்கர் காலி மைதானத்தில் பிரமாண்டமாக இந்த சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட உள்ளது. இ.சி.ஆர். சாலையில், இம்மாநாடு நடைபெற தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை நேற்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. இணை பொது செயலாளர் ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் செங்கல்பட்டு மத்திய மாவட்ட முன்னாள் பா.ம.க. செயலாளர் காரணை தி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் வந்திருந்தனர். முன்னதாக மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு அருகில் 2001-ம் ஆண்டில் இருந்து 2013-ம் ஆண்டு வரை 13 ஆண்டுகள் இந்த சித்திரை முழு நிலவு மாநாடு நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story