விதை பண்ணை திட்ட பயிர்களை கலெக்டர் ஆய்வு


விதை பண்ணை திட்ட பயிர்களை கலெக்டர் ஆய்வு
x

ஜோலார்பேட்டை மற்றும் நாட்டறம்பள்ளி பகுதிகளில் பண்ணை திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார்.

திருப்பத்தூர்

கலெக்டர் ஆய்வு

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியம் கே.பந்தாரபள்ளி ஊராட்சியில் உழவர் நலத்துறையின் சார்பில் விதைப்பண்ணை திட்டத்தின் கீழ் பயிரிடப்பட்டுள்ள கம்பு, காராமணி, சாகுபடி, பச்சைபயிறு, பஞ்சகாலியம் உரம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.7.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் களத்தினை கலெக்டர் பாஸ்கரன் பாண்டியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கிழ் 300 பண்ணை குடும்பங்களுக்கு இலவசமாக 600 தென்னங்கன்றுகள் மற்றும் 15 விவசாயிகளுக்கு ரூ.46 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இடுபொருட்களை, ஜோலார்பேட்டை தொகுதி க.தேவராஜி எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் வழங்கினார்.

134 கிராமங்கள் தேர்வு

பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 134 கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் மூலமாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் நமது மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசிக்கும் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்பும் பொழுது கவனமாக இருக்க வேண்டும். அவர்களிடம் உள்ள பைகளை பாருங்கள், பள்ளி அருகில் உள்ள கடைகளில் எந்த பொருட்களையும் வாங்கி சாப்பிடக்கூடாது என்று அறிவுறுத்துங்கள்.

தமிழக அரசின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்களை தெரிந்து அனைவரும் பலன் அடைய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராமச்சந்திரன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் சூரியகுமார், நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார், நாட்டறம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி சிங்காரவேலு, ஒன்றியக்குழு உறுப்பினர் உமாகண்ணுரங்கம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எஸ்.கே.சதிஷ்குமார், மற்றும் வேளாண்மை துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

=====


Next Story