மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது


மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கியது
x
திருப்பூர்


உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2023-2024ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கியது.

இதுகுறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.கி.கல்யாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது.-

பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை

உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2023 - 2024-ம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி நேற்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இளநிலை பாடப்பிரிவுகளில் மொத்தம் 864 இடங்கள் உள்ளன.

நேற்று நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் சிறப்புபிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றது. அதில் மாற்றுத்திறனாளிகள்-5, பேசிய மாணவர் படை உறுப்பினர் 1, விளையாட்டுத்துறை பிரிவில்-15 பேர் என மொத்தம் 21 பேர் பல்வேறு இளநிலை பாடப்பிரிவுகளில் சேர்ந்தனர். அதைத்தொடர்ந்து ஜூன் 2-ந்தேதி முதல் பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

கலை-வணிகவியல்

2 மற்றும் 3-ந்தேதிகளில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ( பி.பி.ஏ. (60), பிகாம் (சுழற்சி I - 60), பிகாம் (சுழற்சி II - 60), பிகாம் சிஏ (சுழற்சி I - 60), பிகாம் சிஏ (சுழற்சி II -60), இ-காமர்ஸ் (60), பொருளியல் (50) அரசியல் அறிவியல் (50)கலந்தாய்வு நடைபெறும்.

5 மற்றும் 6-ந்தேதிகளில் அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு விண்ணப்பித்த நபர்களுக்கான (இயற்பியல் (48), வேதியியல் (48), தாவரவியல் (20), கணிதவியல் (48), கணினி அறிவியல் (சுழற்சி I - 50), கணினி அறிவியல் (சுழற்சி II - 30) புள்ளியியல் (40))கலந்தாய்வு நடைபெறும்.

தரவரிசை பட்டியல்

6-ந்தேதி பிற்பகல் 2 மணிக்கு இளங்கலைத் தமிழ் இலக்கியப் பாடப்பிரிவுக்கு (60) விண்ணப்பித்தவர்களுக்கும் தொடர்ந்து ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவுக்கு (60) விண்ணப்பித்தவர்களுக்கும் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும். கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பித்தவர்களின் தரவரிசைப்பட்டியல் www.gacudpt.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வில் பங்குபெற வருகை தரும் மாணவர்கள், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் 3 நகல்கள் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 3 நகல்கள் அசல் மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை மற்றும் சாதிச்சான்றிதழ் தலா 3 நகல்கள், பாஸ்போர்ட் அளவு 6 புகைப்படம், www.tngasa.in இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நகல், கல்லூரி இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பதாரரின் ஒரு பக்க தரவரிசை விவரத்தின் நகல், உரிய கல்விக் கட்டணத்துடன் பங்கேற்க வேண்டும்.

கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் வருகை தர வேண்டும். மேலும் விவரங்களுக்கு www.gacudpt.in என்ற கல்லூரியின் இணையதள முகவரியை பார்வையிடலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Next Story