புகார் பெட்டி


புகார் பெட்டி
x
தினத்தந்தி 31 May 2023 7:00 PM GMT (Updated: 31 May 2023 7:00 PM GMT)

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தென்காசி

சேதமடைந்த தடுப்பு கம்பிகள்

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் யூனியன் குணராமநல்லூர் பஞ்சாயத்து கடப்போகத்தி கிராமத்தில் உள்ள குளத்தின் கரையில் சாலையோரமாக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பிகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் குளத்துக்குள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு குளத்தின் கரையில் புதிய தடுப்பு கம்பிகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-பொன்சங்கர், தென்காசி.

வேகத்தடை தேவை

செங்கோட்டை-சுரண்டை சாலை, செங்கோட்டை-குற்றாலம்-தென்காசி சாலை போன்றவற்றில் இருந்த ஏராளமான வேகத்தடைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அகற்றப்பட்டன. இதனால் அந்த வழியாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. அங்கு மீண்டும் வேகத்தடைகள் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-ராஜீவ்காந்தி, செங்கோட்டை.

ஆபத்தான மின்கம்பம்

கடையம் ெரயில் நிலையம் அருகில் குமரேச சீனிவாச காலனி தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பாகம் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் பலத்த காற்றில் மின்கம்பம் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே அங்கு புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-திருக்குமரன், கடையம்.

அபாயகரமான வளைவு

சுரண்டை அருகே சேர்ந்தமரம்- புளியங்குடி சாலையில் பாம்புகோவில்சந்தையில் இருந்து பெரியசாமிபுரம் செல்லும் சாலையில் அமைந்துள்ள அபாயகரமான வளைவில் எச்சரிக்கை பலகை, தடுப்பு சுவர் அமைக்கப்படவில்லை. இதனால் குறுகலான வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே அங்கு எச்சரிக்கை பலகை, தடுப்பு சுவர் அமைத்து தர கேட்டுக்கொள்கிறேன்.

-மதுசூதனன், பெரியசாமிபுரம்.

பயணிகள் நிழற்குடை வேண்டும்

கடையம் யூனியன் மேலாம்பூர் பஞ்சாயத்து கருத்தப்பிள்ளையூரில் இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. பின்னர் புதிய நிழற்குடை கட்டப்படாததால் பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு நிழற்குடை அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

-கிறிஸ்டோபர், கருத்தப்பிள்ளையூர்.


Next Story