ஈரோட்டில் தொடரும் வெப்பம்:அக்னி நட்சத்திரம் விடை பெற்ற பிறகும் கொளுத்தும் வெயில்


ஈரோட்டில் தொடரும் வெப்பம்:அக்னி நட்சத்திரம்  விடை பெற்ற பிறகும் கொளுத்தும் வெயில்
x
தினத்தந்தி 31 May 2023 8:38 PM GMT (Updated: 1 Jun 2023 7:15 AM GMT)

ஈரோட்டில் அக்னி நட்சத்திரம் விடை பெற்ற பிறகும் வெயில் கொளுத்துகிறது

ஈரோடு

அக்னி நட்சத்திரம் விடைபெற்ற பிறகும் ஈரோட்டில் வெயில் கொளுத்துகிறது.

அக்னி நட்சத்திரம் நிறைவு

தமிழ்நாட்டில் கடந்த மே 4-ந்தேதி அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தொடங்கியது. மே 29-ந் தேதி வரை அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் இருந்தது. இந்த ஆண்டு கோடை வெயில் அக்னி நட்சத்திர காலத்தில் மட்டுமின்றி அதற்கு முன்னும் பின்னும் வாட்டி எடுக்கிறது. கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே ஈரோட்டில் வெயில் 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு மேல் பதிவாகி இருந்தது.

மே மாதம் தொடங்கி, கத்தரி வெயிலின் தாக்கத்துக்கு முன்பே ஈரோட்டில் வெயில் 106 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி அதிர்ச்சி அளித்தது. வெயிலின் அளவு 106 அல்லது 107 டிகிரியாக இருந்தாலும் வெப்பம் 111 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி எடுத்தது.

வெப்பத்தின் தாக்கம்

கத்தரி வெயில் காலத்தில் ஓரிரு நாட்கள் ஆங்காங்கே மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் மட்டும் குறையவில்லை. 29-ந் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிந்து விடைபெற்றாலும் வெப்பத்தின் தாக்கம் இன்னும் ஈரோட்டில் முடியவில்லை. நேற்று வெயில் மிகக்கடுமையாக இருந்தது. நேற்று ஈரோட்டில் அதிக பட்சமாக 100.4 டிகிரி வெயில் பதிவானது. ஆனால் வெப்பத்தின் தாக்கம் 106 டிகிரி செல்சியசாக பதிவாகி இருந்தது. இதனால் சாலையில் நடந்து சென்ற பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். குடைகள் பிடித்தபடியும், பெண்கள் தலையில் துப்பட்டாவை அணிந்தபடியும் சென்றனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் சிக்னல்களில் நிற்கும் போது, அனலில் காய்வதுபோன்று சிரமம் அடைந்தனர். ஈரோட்டில் மழை பெய்யும் என்ற வானிலை அறிக்கை இருந்தாலும், நேற்று வெயில் வாட்டியது. வானில் லேசான மேக மூட்டம் ஏற்பட்டாலே மழை பெய்து விடாதா என்று ஈரோட்டு மக்கள் ஏங்கி வருகிறார்கள். அந்த அளவுக்கு இரவில் தூங்கக்கூட முடியாத அளவுக்கு வெப்பம் நேற்று வாட்டியது.


Next Story