'தினத்தந்தி' புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

‘தினத்தந்தி‘ புகார் பெட்டிக்கு 89390 48888 என்ற ‘வாட்ஸ்-அப்‘ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஈரோடு

பழுதடைந்த சாலை

ஈரோடு பெருந்துறை சாலையில் திண்டல் அருகே இருந்து திருச்செங்கோடு செல்லும் புறவழிச்சாலை உள்ளது. மேற்படி ரிங் ரோட்டில் இருந்து திண்டல் செல்லும் பிரிவு சாலையில் தனியார் பள்ளிக்கு செல்லும் ரோட்டில் சுமார் 100 அடி தூரத்துக்கு ரோடு குண்டும், குழியுமாக பழுதடைந்து காணப்படுகிறது. இந்த ரோட்டில் தினமும் நூற்றுக்கணக்கான பள்ளி வாகனங்கள், கார்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள், பள்ளிக்கூட மாணவ- மாணவிகள் மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே பழுதடைந்து காணப்படும் ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கிருஷ்ணன், செங்கரைப்பாளையம்.

தொலைதொடர்பு வசதி

பர்கூர் மலைப்பகுதியில் 33 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைக்கிராமங்களுக்கு தொலைதொடர் வசதி இல்லாததால் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ஆன்லைனில் வகுப்பில் கலந்து கொள்ள முடிவதில்லை. மேலும் வனவிலங்குகள் தாக்கும்போது 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுக்க முடியாததால் உயிாிழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பர்கூர் மலைப்பகுதியில் உள்ள 33 மலை கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

முருகன், பர்கூா்

பூங்கா பராமரிக்கப்படுமா?

கோபி கோசலை நகரில் நகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்கா பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த பூங்காவில் முட்செடிகள் வளர்ந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. மேலும் அருகில் உள்ள வீடுகளின் சாக்கடை கழிவுநீரும் பூங்கா பகுதியில் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அந்த பூங்கா விஷ ஜந்துக்கள் வாழும் இடமாகவும் மாறிவிட்டது. எனவே பூங்காவில் உள்ள முட்செடிகள் மற்றும் புதர்களை வெட்டி அகற்றி பராமரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கோபி.

குண்டும், குழியுமான சாலை

முகாசி அனுமன்பள்ளியில் இருந்து பெருமாள் கோவில், ெசல்லாண்டி அம்மன் கோவில், முருகன் தோட்டம், ஊஞ்சப்பாளையம், பழையபாளையம், முருங்கத்தொழுவு வழியாக செல்லும் ரோடு் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு மிகவும் பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமம் ஏற்படுகிறது. எனவே ரோட்டை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், முகாசி அனுமன்பள்ளி.

தடுப்பு சுவர் தேவை

அந்தியூர் அருகே ஆப்பக்கூடல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் கரை வழியாக வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. ஆனால் ஏரிக்கரையில் தடுப்பு சுவர் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. எனவே ஏரிக்கரையை சரி செய்வதுடன், ஏரிக்கரையில் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும்.

பொதுமக்கள், ஆப்பக்கூடல்.

கரடு, முரடான சாலை

கொடுமுடி அருகே உள்ள பெரிய வட்டம் கருங்கல் மேடு பகுதிக்கு செல்லும் சாலை மிகவும் பழுதடைந்து கரடு, முரடாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக செல்ல அச்சப்படுகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைத்து கொடுக்க வேண்டும்.

பொதுமக்கள், பெரியவட்டம்.

ஆபத்தான குழி

அம்மாபேட்டையை அடுத்த சென்னம்பட்டி அருகே கரத்தலில் உள்ள ரேஷன் கடை முன்பு சாக்கடை வடிகால் அமைக்க கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு குழி தோண்டினார்கள். ஆனால் அதன்பின்னர் பணியை தொடங்காமல் பாதியிலேயே விட்டு்விட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர்கள் குழிக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உடனே வடிகால் அமைக்கும் பணியை தொடங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், கரத்தல்.


Related Tags :
Next Story