மாசடைந்து வரும் தேரேகால்புதூர் சடையன்குளம்


மாசடைந்து வரும் தேரேகால்புதூர் சடையன்குளம்
x

மாசடைந்து வரும் தேரேகால்புதூர் சடையன்குளம்

கன்னியாகுமரி

நாகர்கோவில் அருகே உள்ள தேரேகால்புதூரில் சடையன்குளம் உள்ளது. இந்த குளம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்டது. குளத்தின் ஒரு கரையில் நெல்லை-நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையும், பிற கரைகளில் வீடுகளும், கடைகளும் அமைந்துள்ளன. இந்த குளத்துக்கு வெள்ளமடம் புத்தனார் கால்வாய் வழியாக தண்ணீர் வருகிறது.

இந்த குளம் நிறைந்து வெளியேறும் உபரி தண்ணீரானது தேரூர் கால்வாய் வழியாக தேரூர் பெரியகுளத்தை சென்றடைகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் இந்த குளத்தின் தண்ணீரை பயன்படுத்தி சுமார் 25 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டது. அதோடு வாழை உள்ளிட்ட தோட்டங்களுக்கும் சடையன்குளத்தில் இருந்து தண்ணீர் பாசனம் செய்யப்பட்டது.

கோரை புற்கள்

இந்த குளத்து தண்ணீரை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிக்க, துணி துவைக்க, வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். இதுதவிர குளத்தில் மீன் வளர்ப்பு, வாத்துகள் வளர்ப்பு போன்ற தொழில்களும் நடந்து வந்தது. ஒரு முறை குளம் நிரம்பிவிட்டால் 6 மாதங்கள் வரை தண்ணீர் இருக்கும். அதிலும் குமரி மாவட்டத்தில் இருபருவ மழை பொழிவதால் குளத்தின் தண்ணீர் வற்றியே பார்த்தது இல்லை என்று அந்த பகுதி மக்கள் கூறுகிறார்கள்.

இவ்வாறு விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகவும் பயன்பட்டு வந்த அந்த குளம் தற்போது மிகவும் மோசமாக நிலையில் உள்ளது. இந்த குளம் பல ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. இதனால் குளம் முழுவதும் கோரை புற்கள் வளர்ந்துள்ளன. தேசிய நெடுஞ்சாலையோரத்தில் மட்டும் குளம் சற்று கண்ணில் புலப்படுகிறது. அதுவே மறுகரையில் இருந்து பார்த்தால் குளம் இருப்பதே தெரியாத அளவுக்கு புதர் மண்டிக்கிடக்கிறது. குளம் முழுவதும் தாமரை கொடிகள் படர்ந்து கிடக்கின்றன. அதோடு செடி-கொடிகளும், பாசிகளுமாக காட்சி அளிக்கிறது. கோரை புற்கள் மற்றும் தாமரை கொடிகளால் தண்ணீர் மாசடைந்து உள்ளது. இதனால் குளத்து நீரை பயன்படுத்த முடியவில்லை. எனவே, இந்த குளத்தை தூர்வாரி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

ஆக்கிரமிப்புகள்

இதுபற்றி சடையன்குளம் அருகே கடை வைத்துள்ள அருளப்பன் கூறியதாவது:-

சடையன்குளத்தை முழுமையாக தூா்வாரி 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு பொதுமக்கள் குளிப்பதற்காக ஆங்காங்கே படித்துறைகள் கட்டப்பட்டு உள்ளன. ஆனால் அந்த படித்துறைகள் அனைத்தும் தற்போது இடிந்து குளத்துக்குள் இறங்க முடியாத அளவுக்கு மோசமாக காட்சி அளிக்கிறது. கோரை புற்களும், பாசிகளும், நச்சு செடிகளும் நிறைந்து இருப்பதால் தண்ணீர் சுத்தமாக இல்லை. இதுதவிர வீட்டு கழிவுகள், கடைகள் மற்றும் நிறுவன கழிவுகளும் குளத்தில் கலக்கிறது. கோழி கழிவுகளையும் குளத்தில் வீசுகிறார்கள். இதன் காரணமாக குளத்தின் நீர் அசுத்தமாகி வருகிறது. குளத்தின் கரையில் வீடுகள் கட்டப்பட்டு படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. புதர் மண்டி கிடப்பதால் குளத்தில் இருந்து விஷ பூச்சுகள் குடியிருப்புகளுக்குள் புகுகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

பஸ் கவிழ்ந்தது

மேலும் அந்த பகுதியை சேர்ந்த ெபாதுமக்கள் கூறும் போது, 'கோரை புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால் சில மாதங்களுக்கு முன்பு குளம் இருப்பது தெரியாமல் ஒரு ஆம்னி பஸ் கட்டுப்பாட்டை இழந்து குளத்துக்குள் கவிழ்ந்தது. அந்த பஸ்சை மீட்டவுடன் சாலை ஓரமாக வளர்ந்திருந்த செடி-கொடிகளை வெட்டி அகற்றினர். அதன்பின்பு குளத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை. குளத்தை தூர்வாரும் படி அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். அப்போது அனைத்து குளங்களையும் தூர்வார நிதி ஒதுக்கும்போது இந்த குளத்தையும் தூர்வாரி விடுவோம் என்று அதிகாரிகள் கூறினர். ஆனால் தற்போது வரை குளத்தை தூர்வாரவில்லை. எப்போதுதான் குளம் தூர்வாரப்படும்? என்ற எதிர்பார்ப்பில் நாங்கள் உள்ளோம்' என்றனர்.

-----


Next Story