தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

பெரம்பலூர்

மாணவர்களின் கல்வி பாதிப்பு

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதிய பேராசிரியர்கள் இல்லாததால் மாணவ-மாணவிகளுக்கு சரியாக வகுப்புகள் எடுக்க முடியாமல் உள்ளது. இதனால் அவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே கூடுதல் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். மேலும் தற்காலிக பேராசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

சட்ட விரோதமாக மது விற்பனை

பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியே வரும் பகுதியின் எதிரே உள்ள டாஸ்மாக் கடையின் மதுபான கூடத்தில் காலை நேரத்தில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு மது பிரியர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டும், காணாதது போல் நடவடிக்கை எடுக்காமல் சென்று விடுகிறார்கள். எனவே அவர்களின் உயர் அதிகாரிகள் சட்ட விரோதமான மது விற்பனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின் கம்பிகள் மாற்றப்படுமா?

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுவேட்டக்குடி கிராமத்தின் ஆதிதிராவிடர் பகுதியில் உள்ள மின் கம்பங்களின் மின் கம்பிகள் இணைக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின் கம்பிகளின் தன்மையை ஆராய்ந்து புதிய மின் கம்பி இணைப்புகளை இப்பகுதி முழுவதும் அமைத்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

விடுதிகள் கட்டும் பணியை தொடங்க வேண்டும்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர் விடுதி கட்ட பணிகள் தொடங்கப்பட்டு பாதியிலேயே நிற்கிறது. இதே போல் பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவர் விடுதி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் பணி தொடங்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதிகள் கட்டும் பணியை தொடங்கி விரைவில் முடித்து கல்லூரி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பராமரிக்கப்படாத விளையாட்டு மைதானம்

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, நெய்குப்பை கிராமம், காலனி தெருவில் அமைந்துள்ள விளையாட்டு மைதானம் பராமரிப்பு இன்றி உள்ளதால் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.


Next Story