தி.மு.க. உறுப்பினர் அதிக நேரம் பேசியதால் கவுன்சிலர்கள் வாக்குவாதம்


தி.மு.க. உறுப்பினர் அதிக நேரம் பேசியதால் கவுன்சிலர்கள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

நெல்லிக்குப்பம் நகராட்சி கூட்டத்தில் தி.மு.க. உறுப்பினர் அதிக நேரம் பேசியதால் கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கடலூர்

நெல்லிக்குப்பம்,

நெல்லிக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நடந்தது. இதற்கு நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி, பொறியாளர் பாண்டு, துப்புரவு அலுவலர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்கள் பின்வருமாறு:-

பாரூக் அலி (சுயேச்சை) :- நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி பாக்கி அதிகமாக உள்ளதால் அதிகாரிகள் அந்தந்த கவுன்சிலர்களுடன் இணைந்து வரி வசூல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்

ராணி (ம.தி.மு.க.):- நெல்லிக்குப்பம் நகராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை எங்கள் பகுதிக்கு ஒதுக்க வேண்டும்.

முத்தமிழன் (தி.மு.க.):- எனது வார்டுக்கு தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது கவுன்சிலர் பூபாலன் (சுயேச்சை) என்பவர் எழுந்து, முத்தமிழனிடம், அதிக நேரம் பேசி வருகிறீர்கள். எனது வார்டுக்கு தேவையான சாலை வசதி குறித்து நான் பேச வேண்டும் என்றார்.

அப்போது முத்தமிழன், எனது வார்டு தொடர்பாக நான் கேள்வி எழுப்பி வருகிறேன்.

வாக்குவாதம்

உங்களுக்கு தார் சாலை வேண்டுமென்றால் கோரிக்கை வையுங்கள் என்றார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் வைக்கும் கோரிக்கைகள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துவிட்டு கூட்டத்தை முடித்தார்.

அப்போது பெண் கவுன்சிலர் சரளாவின் கணவர் பிச்சை என்பவர், கவுன்சிலர் முத்தமிழனிடம் கூட்டத்தில் அதிக நேரம் நீங்கள் பேசி வருவதால் மற்ற கவுன்சிலர்கள் எப்போது பேசுவார்கள் என கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தி்.மு.க. பெண் கவுன்சிலர் இலக்கியாவின் கணவரும் தி.மு.க. இளைஞரணி அமைப்பாளருமான சாமிநாதன் எங்கள் பகுதிக்கும் தார் சாலை வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் தி.மு.க. கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன், கவுன்சிலரின் கணவரான நீங்கள் எப்படி இங்கு பேச முடியும் என சாமிநாதனிடம் கேள்வி எழுப்பினார். இதனால் அவர்களுக்கு இடையேயும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்கிருந்த ஜெயபிரபாவின் கணவரான தி.மு.க. நகர செயலாளர் மணிவண்ணன் சாமிநாதனிடம் தட்டிக்கேட்டபோது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களை அதிகாரிகள் சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர்.


Next Story