பொதுமக்களுடன் தே.மு.தி.க.வினர் சாலை மறியல்


பொதுமக்களுடன் தே.மு.தி.க.வினர் சாலை மறியல்
x

இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் மற்றும் தே.மு.தி.க.வினர் இணைந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை

வடகாடு:

இலவச பட்டா கேட்டு...

வடகாடு அருகே அனவயல் எல்.என்.புரம் ஊராட்சிக்கு உட்பட்ட சுக்கிரன்குண்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் சுமார் 100 குடும்பத்தினர் குடியிருக்க இடமில்லாமல் நீர்நிலை ஓரங்கள் மற்றும் புறம்போக்கு பகுதிகளில் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர்.

பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின் தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர். இதில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருக்க உரிய இடமின்றி தவித்து வந்துள்ளனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் முதல் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சாலை மறியல்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்களுடன் புளிச்சங்காடு-கைகாட்டி நெடுஞ்சாலையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் மன்மதன் தலைமையில், தே.மு.தி.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் செந்தில்நாயகி மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபக்ரஜினி, வருவாய் அலுவலர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இன்னும் 6 மாதத்திற்குள் அப்பகுதி பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் புளிச்சங்காடு-கைகாட்டி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story