பூக்கள் விலை உயர்வு


பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:46 PM GMT)

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், மல்லிகை கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. இதனால், மல்லிகை கிலோ ரூ.1,300-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே தோவாளையில் பூ மார்க்கெட் உள்ளது. இங்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. குறிப்பாக கொடைக்கானல், ஊட்டி, சேலம், திண்டுக்கல், மதுரை, வாடிப்பட்டி, செம்பட்டி, ஒட்டன்சத்திரம் பகுதிகளில் இருந்தும், குமரி மாவட்டத்தின் செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளான காவல்கிணறு, ஆவரைக்குளம் ஆகிய இடங்களில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகிறது.

இவற்றை வாங்க குமரி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் அதிகாலையிலேயே வியாபாரிகள் வருகை தந்து போட்டி போட்டு பூக்களை வாங்கிச் செல்கிறார்கள்.

மல்லிகை ரூ.1300

மார்க்கெட்டில் நேற்று முன்தினம் கிலோ ரூ.600-க்கு விற்பனையான மல்லிகை பூ, நேற்று ரூ.700 உயர்ந்து ரூ.1,300-க்கு விற்பனை ஆனது. இதுபோல், பிச்சி ரூ.750-ல் இருந்து ரூ.1,250 ஆகவும், முல்லை ரூ.700-ல் இருந்து 1,200-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து பூவியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், "நாளை முகூர்த்தநாள் என்பதால் பூக்கள் தேவை அதிகமாக இருந்தது. ஆனால், நேற்று முன்தினம் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வழக்கமாக தினமும் மல்லிகை 1½ டன் மார்க்கெட்டுக்கு வரும். நேற்று 1 டன் மட்டுமே வந்தது. மேலும், பிச்சி 1 டன்னுக்கு பதிலாக 500 கிலோ மட்டுமே வந்தது. இதனால், வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றதால் பூக்களின் விலை உயர்ந்தது" என்றார்.

விலை விவரம்

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.120, கனகாம்பரம் ரூ.400, வாடாமல்லி ரூ.60, மஞ்சள்கேந்தி ரூ.60,சிவப்பு கேந்தி ரூ.60, சம்பங்கி ரூ.200, ரோஜா (100 எண்ணம்) ரூ.20, பட்டன்ரோஸ் ரூ.140, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) ரூ.1500, பச்சை ரூ.8, கோழிப்பூ ரூ.50, கொழுந்து ரூ.70, மருக்கொழுந்து (கட்டு) ரூ.80, மஞ்சள் சிவந்தி ரூ.130, வெள்ளை சிவந்தி ரூ.130, ஸ்டெம்புரோஸ் (1கட்டு) ரூ.300 என விற்பனையானது.


Next Story