கூட்டுறவு வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி


கூட்டுறவு வங்கி பெண் ஊழியரிடம் ரூ.3 லட்சம் மோசடி
x
சேலம்

கூட்டுறவு வங்கியில் பணிபுரியும் பெண் ஊழியரிடம் ஆன்லைன் மூலம் ரூ.3 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூட்டுறவு வங்கி

சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர் கூட்டுறவு வங்கி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். அவரது செல்போன் வாட்ஸ்-அப் எண்ணுக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஒரு தகவல் வந்தது. அதில் பகுதி நேர வேலையாக யூடியூப்பில் ஒரு குறிப்பிட்ட வீடியோவை 'லைக்' மற்றும் 'ஷேர்' செய்தால் பணம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

அந்த பெண் 'லைக்' மற்றும் 'ஷேர்' செய்ததற்கு அவருக்கு ரூ.1,400 கிடைத்தது. இதையடுத்து அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர், ஒரு செயலியில், ஆன்லைன் மூலம் பணம் முதலீடு செய்தால் மாதந்தோறும் கமிஷன் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை கிடைக்கும் என்று கூறினார். இதை உண்மை என நம்பிய அந்த பெண் மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு ரூ.3 லட்சத்து 59 ஆயிரம் அனுப்பினார்.

போலீசார் விசாரணை

இதில் ஆரம்பத்தில் கமிஷன் தொகையாக அவருக்கு ரூ.47 ஆயிரத்து 950 கிடைத்தது. ஆனால் அதன்பிறகு அவருக்கு பணம் கிடைக்கவில்லை. மர்ம நபர் தொடர்பு கொண்ட செல்போன் எண்ணும் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டு இருந்தது.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அந்த பெண், மோசடி குறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைலாசம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story