'நான் ஊழல் செய்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்'-நிதி அமைச்சருக்கு, செல்லூர் ராஜூ பகிரங்க சவால்


நான் ஊழல் செய்ததை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்-நிதி அமைச்சருக்கு, செல்லூர் ராஜூ பகிரங்க சவால்
x

கூட்டுறவு துறையில் நான் அமைச்சராக இருந்த போது ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார். இதனை அவர் நிரூபித்து விட்டால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இல்லையென்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

மதுரை

கூட்டுறவு துறையில் நான் அமைச்சராக இருந்த போது ரூ.15 ஆயிரம் கோடி ஊழல் செய்ததாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார். இதனை அவர் நிரூபித்து விட்டால், நான் அரசியலில் இருந்து விலகுகிறேன். இல்லையென்றால் நிதி அமைச்சர் அரசியலில் இருந்து விலக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

ஆலோசனை கூட்டம்

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 29-ந் தேதி மதுரை வருகிறார். இங்கு அவர் பழங்காநத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இந்த நிகழ்ச்சிக்கு வரும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்கு தொடர்பான ஆலோசனை கூட்டம், மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.வுமான செல்லூர் ராஜூ தலைமை தாங்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின் முதன் முறையாக எடப்பாடி பழனிசாமி, 29-ந் தேதி மதுரை வருகிறார். அவர் அன்றைய தினம் பேசும் பொதுக்கூட்டத்தில் மக்கள் கடலை பார்க்கலாம். தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு உள்பட மதக்கலவரத்திற்கு தி.மு.க.வின் அ.ராசா பேசிய பேச்சு தான் காரணம். அவரை தண்டிக்க வேண்டிய முதல்-அமைச்சர் மவுன சாமியாக இருக்கிறார். அ.தி.மு.க. ஆட்சியில் பெரும்பாலானோருக்கு முதியோர், விதவை ஒய்வூதியம் வழங்கி கொண்டு இருந்தோம். அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், இந்த எண்ணிக்கை போதாது. இன்னும் அதிகமானோருக்கு இந்த உதவித்தொகை வழங்க வேண்டும் என்று கூறினார். அப்போது இந்த நிதி அமைச்சர் மாங்கா பறிக்க சென்று இருந்தாரா என்று தெரியவில்லை. இப்போது, தி.மு.க அரசு, 2 லட்சம் பேருக்கு ஓய்வூதிய தொகையை குறைத்து விட்டது.

பகிரங்க சவால்

கூட்டுறவு துறையில் நான் அமைச்சராக இருந்த போது ரூ.15 ஆயிரம் கோடி முறைகேடு நடந்ததாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருக்கிறார். அதனை அவர் நிரூபித்து விட்டால், நான் அரசியலில் இருந்தே விலகுகிறேன். இல்லையென்றால் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியலில் இருந்து விலக வேண்டும். அதனை நான் பகிரங்க சவால் விடுகிறேன்?. எந்த அர்த்தத்தில் என் மீது குற்றம் சுமத்துகிறார். எந்த புள்ளி விவரத்தில் சொல்கிறார். நிதி அமைச்சருக்குரிய தகுதியே இல்லாத ஒருவரை தி.மு.க. நிதி அமைச்சராக வைத்து இருக்கிறது. தமிழகத்தில் வரி உயர்த்தப்படுவதற்கு முழுக்க, முழுக்க நிதி அமைச்சர் தான் காரணம். தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்புணர்வு வருவதற்கு நிதி அமைச்சர் தான் காரணம்.

யாரையும் உள்ளே விடுவதில்லை

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டு, இப்போது நிதி அமைச்சர் நியாயம் பேசுகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் இப்போது திறந்து வைத்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டுகளில் மதுரைக்கு எந்த திட்டத்தை நிதி அமைச்சர் கொண்டு வந்து இருக்கிறார்? மதுரை மக்கள் நிதி அமைச்சரை சந்தித்து குறைகளை சொல்ல முடிகிறதா? அவரது வீட்டில் 3 கதவுகளை போட்டு மக்கள் யாரையும் உள்ளே விடுவதில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.


Related Tags :
Next Story