ஊட்டி மார்க்கெட்டில் 19 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு-மர்மநபர்கள் கைவரிசை


ஊட்டி மார்க்கெட்டில் 19 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு-மர்மநபர்கள் கைவரிசை
x
தினத்தந்தி 25 Sep 2022 6:45 PM GMT (Updated: 25 Sep 2022 6:46 PM GMT)
நீலகிரி

ஊட்டி

ஊட்டி மார்க்கெட்டில் 19 கடைகளின் பூட்டை உடைத்து திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

திறந்து கிடந்த கடைகள்

ஊட்டி நகரில் முக்கிய பகுதியில் நகர மத்திய காவல் நிலையம் முன்பு அமைந்து உள்ளது ஊட்டி மார்க்கெட். 12 ஏககரில் உள்ள இந்த மார்க்கெட்டில் காய்கறி, பழங்கள் மீன், மளிகை, துணி கடை மற்றும் மருந்து கடைகள் என் 400-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு 2 காவலரிகள் உள்ளனர்.மேலும், சி.சி.டி.வி கேமரா அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வியாபாரிகள் தங்களது கடையை திறக்க வந்தனர்.அப்போது கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி ஊட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

ரூ.31 ஆயிரம் திருட்டு

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகுமார் மற்றும் போலீசார் மார்க்கெட் பகுதியில் நேரில் சென்று விசாரனை நடத்தினர். மேலும் அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது மார்க்கெட்டில் நேற்று முன்தினம் மர்ம கும்பல் ஒன்று புகுந்து உள்ளது. அதில் ஒருவர் பாபு என்பவரின் கடையை உடைத்து உள்ளே மேசையில் இருந்த பணத்தை எடுத்த காட்சிகள் பதிவாகி இருந்தன. மேலும் மொத்தம் 19 கடைகளில் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர். இதில் 31 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டு இருந்தது.இதையடுத்து அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளின் பூட்டை உடைத்த பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story