ஆண்டிப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை? பொதுமக்கள் புகார்


ஆண்டிப்பட்டி பகுதியில்  ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை?  பொதுமக்கள் புகார்
x

ஆண்டிப்பட்டி பகுதியில் ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி

ரேஷன் கடை பொருட்கள்

ஆண்டிப்பட்டி தாலுகாவில் 170-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. ஆண்டிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், டி.சுப்புலாபுரம், முல்லையம்பட்டி, பாலக்கோம்பை, ராமலிங்காபுரம், ரெங்கசமுத்திரம், எம்.சுப்புலாபுரம், கண்டமனூர், மயிலாடும்பாறை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் இந்த ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த கடைகளுக்கு உட்பட்ட 77 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக தரப்படுகிறது. 15 கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு 5 கிலோ கோதுமையும், 20 கிலோ அரிசி வாங்குபவர்களுக்கு 3 கிலோ கோதுமையும் இலவசமாகவும், மற்ற பொருட்கள் மானிய விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் புகார்

இந்தநிலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களை, பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு வெளிச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

குடும்ப அட்டைதாரர்களில் 80 சதவீதம் மக்கள் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கினால் மற்ற 20 சதவீதம் பேர் பொருட்கள் வாங்குவதில்லை. இந்த பொருட்கள் வாங்காத குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வாங்கியதாக கணக்கு காட்டப்பட்டு, அவர்களுக்கான ரேஷன் பொருட்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

பாமாயில் விற்பனை

குறிப்பாக ரேஷன் கடைகளில் ரூ.25-க்கு விற்பனை செய்யப்படும் ஒரு லிட்டர் பாமாயில் பாக்கெட் கள்ளச்சந்தையில் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் டீக்கடை, ஓட்டல், பேக்கரி கடைகள், சில்லரை விற்பனை எண்ணெய் கடைகள், இரவு நேரங்களில் செயல்படும் மீன் மற்றும் இறைச்சி கடைகளில் ரேஷன் கடை பாமாயில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ரேஷன் கடைகளில் பாமாயில் குறித்து கேட்டால் இருப்பு இல்லை என்று கடை ஊழியர்கள் தெரிவிப்பதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் ஏழை-எளிய மக்கள் சமையலுக்கு எண்ணெய் கிடைக்காமல் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே ரேஷன் கடை பாமாயில் அனைத்து தரப்பு மக்களுக்கும் தடையின்றி கிடைக்கவும், கள்ளச்சந்தையில் ரேஷன் பொருட்கள் விற்கப்படுவதை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story