விழுப்புரத்தில்என்ஜினீயர், விஏஓ வீட்டில் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரத்தில்என்ஜினீயர், விஏஓ வீட்டில் நகைகள் திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:45 PM GMT)

விழுப்புரத்தில் என்ஜினீயர், வி.ஏ.ஓ. வீட்டில் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விழுப்புரம்

விழுப்புரம் சாலாமேடு வள்ளலார் நகர் 2-வது தெரு பகுதியில் வசித்து வருபவர் அருண்ராஜ் (வயது 40). இவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். தற்போது இவர், விழுப்புரத்தில் உள்ள வீட்டில் இருந்தவாறே பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் விழுப்புரம் அருகே பேரங்கியூரில் உள்ள பாட்டி வீட்டிற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று காலை விழுப்புரம் வந்தனர்.

நகை திருட்டு

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 15¾ பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தார். நள்ளிரவில் யாரோ மர்ம நபர்கள், பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.5 லட்சமாகும்.

கிராம நிர்வாக அலுவலர் வீடு

இதேபோல் விழுப்புரம் வழுதரெட்டி என்.ஜி.ஜி.ஓ. காலனி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (40). இவர் விழுப்புரம் அருகே பில்லூரில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய குடும்பத்தினர் வடலூரில் வசித்து வருகின்றனர். தினமும் சுரேஷ்குமார், வடலூரில் இருந்து பில்லூருக்கு பணிக்கு வந்து செல்கிறார்.

நேற்று காலை இவருடைய வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்து சுரேஷ்குமாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர், தனது வீட்டிற்கு விரைந்து வந்து பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 1 பவுன் நகை திருட்டு போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அருண்ராஜ், சுரேஷ்குமார் ஆகியோர் தனித்தனியாக விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். விழுப்புரம் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளில் நடந்த திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story