தொடர் மழையால் விவசாய நிலங்களில் வெள்ளம்: முதுமலை ஊராட்சியில் 7 ஆயிரம் வாழைகள் பாதிப்பு


தொடர் மழையால் விவசாய நிலங்களில் வெள்ளம்: முதுமலை ஊராட்சியில் 7 ஆயிரம் வாழைகள் பாதிப்பு
x
தினத்தந்தி 25 Sep 2022 7:00 PM GMT (Updated: 25 Sep 2022 7:00 PM GMT)
நீலகிரி

கூடலூர்

தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் முதுமலை ஊராட்சியில் பயிரிட்ட 7 ஆயிரம் வாழைகள் வளர்ச்சி இன்றி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கன்றுகளை நட வேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

தொடர் மழை- வெள்ளம்

தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை பெய்யக்கூடிய பகுதியாக கூடலூர் விளங்குகிறது. இதனால் ஆண்டு தோறும் ஜூன் தொடங்கி நவம்பர் மாதம் வரை மழைக்காலமாக உள்ளது. நடப்பு ஆண்டில் கோடை காலம் மிகக் குறைவாக காணப்பட்டது. மே மாதம் முதல் வாரத்தில் இருந்து தொடர் மழை பெய்தது. கடந்த சில வாரங்களாக மழையின் தாக்கம் அளவுக்கு அதிகமாக காணப்பட்டது.

இதன் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு கூடலூர் சுற்றுவட்டார பகுதியான ஸ்ரீமதுரை, முதுமலை ஊராட்சிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் வாழை உள்ளிட்ட விவசாய பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது. 3 மாதங்களுக்கும் மேலாக தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக பச்சை தேயிலை விளைச்சல் அடியோடு சரிந்தது.

இதேபோல் காய்கறி விவசாயமும் பாதித்தது. இந்த நிலையில் முதுமலை ஊராட்சியில் தொடர் மழையால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நிலத்தில் பயிரிட்டு இருந்த வாழைக்கன்றுகள் போதிய வளர்ச்சி இல்லாமல் நிற்கிறது. இதனால் பருவம் கடந்தும் வளர்ச்சி இல்லாததால் வேறு கன்றுகளை நடவேண்டிய சூழ்நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் வாழை விவசாயத்துக்கு செலவழித்த தொகை வீணானது என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.

இதுகுறித்து முதுமலை ஊராட்சி விவசாயிகள் கூறியதாவது:-

7 ஆயிரம் வாழைகள் பாதிப்பு

நடப்பு ஆண்டில் கனமழையால் வெள்ளம் ஏற்பட்டு விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் முதுமலை ஊராட்சியில் பயிரிட்டு இருந்த சுமார் 7 ஆயிரம் வாழைக்கன்றுகள் அளவுக்கு அதிகமான நீரால் போதிய வளர்ச்சி இல்லாமல் நிற்கிறது. தற்போது வாழை குறைந்து விட்ட நிலையில் வாழைக்கன்றுகள் வளர்ச்சி இல்லாமல் உள்ளது. இதனால் வளர்ச்சி இல்லாத வாழைக்கன்றுகளை முழுமையாக அகற்றிவிட்டு வேறு கன்றுகள் நட்டால் மட்டுமே பலன் கிடைக்கும். இதனால் செலவழித்த தொகையும் வீணாகி விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story