பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரிப்பு


பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 31 Jan 2023 6:45 PM GMT (Updated: 31 Jan 2023 6:47 PM GMT)

வெளிமாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வெளிமாவட்டங்களில் இருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது.

தர்பூசணி

கோடையை சமாளிக்க மக்கள் குளிர்பானங்கள், இளநீர், பழச் சாறுகள், நுங்கு, தர்பூசணி பழம் போன்றவற்றை வாங்கி உட்கொண்டு, தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்து கொள் வார்கள். தற்போது பொள்ளாச்சியில் இரவு மற்றும் அதிகாலை யில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

ஆனாலும் பகலில் வெயில் கொளுத்துகிறது. இதனால் தற்போதே தர்பூசணி பழங்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டுவர தொடங்கிவிட்டனர்.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள மொத்த வியாபார கடைகளுக்கு மட்டுமின்றி, சில்லரை விற்பனை கடைகளுக்கும் திருவண்ணாமலை, தாராபுரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதியிலிருந்து தர்பூசணி வரத்து அதிகரித்து உள்ளது.

வரத்து அதிகரிப்பு

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பொள்ளாச்சி மார்க் கெட்டுக்கு, வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வரத்து அதிகமாக உள்ளது.

தர்பூசணி விளைச்சல் ஒருபக்கம் இருந்தாலும், இந்த ஆண்டில் வெயிலின் தாக்கம் காரணமாக, மார்கெட்டுக்கு 2 வாரத்துக்கு முன்பே தர்பூசணி வரத்து தொடங்கி உள்ளது.

பொள்ளாச்சிகாந்தி மார்க்கெட்டில் உள்ள பல கடைகளில் தர்பூசணி பழம் குவிந்துள்ளது.

இதை வாங்க உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி, உடுமலை, திருப்பூர், கோவை, பல்லடம், ஈரோடு மற்றும் வால்பாறை உள் ளிட்ட பல பகுதிகளில் இருந்து, வியாபாரிகள் நேரில் வந்து வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஆண்டு வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி வரத்து சற்று குறைவாக இருந்தது. அப்போது ஒரு கிலோ ரூ.18 முதல் ரூ.25 வரை விற்பனை செய்யப்பட்டது.

ஆனால் இந்த ஆண்டு, தர்பூசணி வரத்து அதிகமாக உள்ளது. இதனால் மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.15 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

விலை அதிகரிக்கும்

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், வெளி மாவட்டங்களில் இருந்து கோவைக்கு விற்பனைக்காக தர்பூசணி வரத்து அதிகமாக உள்ளது. வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும்.

அப்போது கோடை வெயிலின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில் பொதுமக்கள் தர்பூசணி பழங்க ளை விரும்பி சாப்பிடுவார்கள். இதனால் விற்பனை மும்முரமாக நடைபெறும்.

மேலும் தர்பூசணியின் விலை சற்று அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றனர்.

கோடை வெயில் தொடங்க உள்ள நிலையில் பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதியில் ஏராளமானோர் தர்பூசணியை வாங்கி செல்கின்றனர். இதனால் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.


Next Story