கறம்பக்குடி பகுதியில் வறண்டு கிடக்கும் பாசன குளங்கள்


கறம்பக்குடி பகுதியில் வறண்டு கிடக்கும் பாசன குளங்கள்
x

வரத்து வாய்க்கால்கள் பராமரிக்கபடாததாலும், முறையான நீர் மேலாண்மை திட்டம் இல்லாததாலும் கறம்பக்குடி பகுதியில் முக்கிய பாசன குளங்கள் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

38 பாசன குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகாவில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சி பகுதிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. மழை காலங்களில் ஏரி, குளங்கள் நிரம்புவதன் மூலமும், ஆழ்குழாய் பாசனம் மூலமும் மட்டுமே இப்பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தை ஒட்டிய பகுதி என்பதால் கறம்பக்குடி தாலுகாவில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது.

கறம்பக்குடி தாலுகாவில் பொதுப்பணித்துறை சொந்தமான 9 பெரிய ஏரிகள் 38 பாசன குளங்கள் உள்ளன. புலவன்காடு, மானியவயல், திருமணஞ்சேரி ஆகிய பகுதிகளில் அக்னி ஆற்று அணைகட்டுகளும் உள்ளன. இதை தவிர ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட பாசன குளங்களும் உள்ளது. இந்த குளங்களின் மூலம் கறம்பக்குடி தாலுகாவில் உள்ள சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வந்தன.

சமவெளிகளாக காட்சி அளிக்கும் குளங்கள்

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாசன குளங்களுக்கு தண்ணீர் செல்லும் வாய்க்கால்கள் பராமரிக்கபடாமல் தூர்ந்துபோனதாலும், ஆக்கிரமிப்புகளாலும் எவ்வளவு மழை பெய்தாலும், காட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு சென்றபோதும் பல பாசன குளங்கள் நிரம்பவே இல்லை. சில குளங்கள் பல ஆண்டுகளாக வறண்டு கிடக்கின்றன. கறம்பக்குடி பெரியகுளம், மாங்கோட்டைகுளம், ராட்டினாகுளம், வெள்ளாளவிடுதி மங்களாகுளம் உள்ளிட்ட பல பாசன குளங்கள் வறண்டு சமவெளிகளாக காட்சி அளிக்கின்றன.

பல ஏக்கர் நிலங்கள் தரிசு

இதேபோல் கறம்பக்குடி தாலுகா காவிரி பாசன பகுதிகளில் கடைமடை கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் ராங்கியன் விடுதி பெரிய ஏரி, குளந்திரான்பட்டு பெரியகுளம் உள்ளிட்ட பாசன குளங்கள் தண்ணீர் இன்றி காய்ந்து கிடக்கின்றன. மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கபட்டும், காவிரியில் வெள்ளம் கரைபுரண்டு சென்ற நிலையிலும் பாசன குளங்களுக்கு தண்ணீர் வராததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். இதனால் கறம்பக்குடி பகுதியில் பாசன குளங்களை நம்பி விவசாயம் செய்யப்படும் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக விடப்பட்டு உள்ளன. இதனால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்

இதுகுறித்து கறம்பக்குடி குமரகுளம் ஆயக்கட்டு சங்க தலைவர் மணிவண்ணன் கூறுகையில், பல பகுதிகளில் பாசன குளங்களின் வரத்து வாரிகள் பராமரிக்கப்படவில்லை. முறையான நீர் மேலாண்மை திட்டம் இல்லாததால் காவிரி பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கவில்லை. ஆழ்குழாய் பாசனம் மட்டுமே தற்போது விவசாயத்திற்கு கைகொடுக்கிறது. பாசன குளங்களில் தண்ணீர் இல்லாததால் நிலத்தடி நீர்மட்டமும் குறைய வாய்ப்பு உள்ளது. எனவே வாய்க்கால்களை சீரமைத்து, பாசன குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

கறம்பக்குடி காட்டாற்றில் தடுப்பணை

கறம்பக்குடி பெரிய குளத்திற்கு அருகே உள்ள காட்டாற்றில் தடுப்பணை அமைத்து வாய்க்கால் மூலம் பெரிய குளத்திற்கு தண்ணீர் கொண்டு வர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள அந்த குளம் நிரம்பினால் அப்பகுதியில் உள்ள சுமார் 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். கறம்பக்குடி சுற்று வட்டார பகுதிகளின் நிலத்தடி நீர்மட்டமும் உயரும்.

மணல் திருடர்களால் தூர்க்கபட்ட வாய்க்கால் மீட்டெடுப்பு

கறம்பக்குடி அக்னி ஆற்றில் புலவன்காடு அணைகட்டில் இருந்து துவார் பெரிய ஏரி உள்பட 12 பாசன கண்மாய்களுக்கு செல்லும் வாய்க்காலை மணல் திருடர்கள் தூர்த்து வழித்தடம் அமைத்திருந்தனர். நீண்ட போராட்டத்திற்கு பின் சில பகுதிகளில் வாய்க்கால்கள் மீட்கபட்டு தூர்வாரப்பட்டு உள்ளது. 60 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல கட்டமைப்புடன் உருவாக்கப்பட்ட இந்த வாயக்்கால்களை பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

டெல்டா பகுதி சலுகைகள் வழங்க வேண்டும்

கறம்பக்குடி ஒன்றியத்தில் 12 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகளாக உள்ளன. தஞ்சாவூர் மாவட்ட சாகுடியை ஒட்டியே இந்த பகுதிகளில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளுக்கு கிடைக்கும் உர மானியம், பயிர்கடன் உள்ளிட்ட எந்த சலுகைகளும் கறம்பக்குடி காவிரி பாசன விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே டெல்டா பகுதி விவசாயிகளுக்கான சலுகைகள் தங்களுக்கும் வழங்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story