"மதுபானம் அத்தியாவசிய பொருளா?" - மதுரை ஐகோர்ட் பரபரப்பு கேள்வி


மதுபானம் அத்தியாவசிய பொருளா? - மதுரை ஐகோர்ட் பரபரப்பு கேள்வி
x
தினத்தந்தி 23 March 2023 9:32 AM GMT (Updated: 23 March 2023 9:37 AM GMT)

விருதுநகரில் மதுபானக்கடையை அகற்றக்கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரை கிளை இந்த கேள்வியை எழுப்பியுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுக்காவில் அமைந்துள்ள வாகைக்குளம் என்ற கிராமத்தில் செயல்பட்டுவந்த மதுக்கடையை அகற்றக்கோரி ஐகோர்ட்டு மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது.

அதில், மதுக்கடையை சுற்று பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் வசித்துவருவதாகவும், இதனால் மோதல் சம்பவம் ஏற்பட்டு சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், மதுபானக்கடை இருக்கக்கூடிய பகுதி சிறுவர்கள், பெண்கள் அதிகம் சென்றுவரக்கூடிய பகுதியாக உள்ளது. எனவே இந்த மதுக்கடையை அகற்றவேண்டும் எனக்கோரி இந்த வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது டாஸ்மாக் தரப்பில், மதுபானக்கடை உரிய அனுமதிபெற்று செயல்பட்டுவருவதாகவும், 20 கிலோமீட்டர் தொலைவுக்கு எந்த மதுபானக்கடைகளும் கிடையாது எனவும் கூறப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், 20 கி.மீ தொலைவிற்கு ஒரு மதுபான கடை தான் உள்ளது என கூற மதுபானம் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பொருளா?" என கேள்வியெழுப்பினர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பாக உள்துறை, கலால் மற்றும் மதுவிலக்கு துறை கூடுதல் செயலர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், விருதுநகர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.



Next Story