சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்; ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி


சாயக்கழிவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்; ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
x

சாயக்கழிவு பிரச்சினைக்காக நிரந்தர தீர்வு காணப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

ஈரோடு

சாயக்கழிவு பிரச்சினைக்காக நிரந்தர தீர்வு காணப்படும் என்று ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.

தேர்தல் பணிமனை

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி மாநகராட்சி 25-வது வார்டுக்கு உள்பட்ட கருங்கல்பாளையத்தில் தேர்தல் பணிமனை அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் முன்னிலை வகித்தார்.

விழாவில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ரிப்பன்வெட்டி பணிமனையை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த 20-ந் தேதி தேர்தல் பணியை தொடங்கினோம். 21-ந் தேதி முதல் வீடு, வீடாக வாக்கு சேகரித்து வருகிறோம். முதல்-அமைச்சர் மீது மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. மாநகராட்சியில் ரூ.300 கோடி ஒதுக்கப்பட்டு பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடந்து வருகிறது. திருமகன் ஈவெரா 1½ ஆண்டில் ஏராளமான பணிகளை செய்து உள்ளார். அவரது தந்தையே வேட்பாளராக நிற்கிறார். அவர் ஏற்கனவே மக்களிடம் அறிமுகமானவர்.

நிரந்தர தீர்வு

சென்னையில் இருந்து எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க. பகுதி செயலாளர்கள், நிர்வாகிகளை அழைத்து வந்து முன்மாதிரியாக பணிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி இருக்கிறார். சென்னையில் அவர் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை பிரமாதமாக செய்து உள்ளார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அவர் பிரசாரத்தை தொடங்கி இருக்கிறார். சாயக்கழிவு, தோல் கழிவுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரிய திட்டம் அமல்படுத்த வேண்டி உள்ளது. எனவே நிரந்தர தீர்வு காணப்படும்.

அமைச்சர் நேரு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பேசிய வீடியோவில் உண்மை தன்மை கிடையாது. இதுதொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை கூறியதை முதலில் நிரூபிக்கட்டும். இடைத்தேர்தல் வரும்போது அமைச்சர்கள் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபடுவது நடைமுறை. நாங்கள் அவர்களை அழைத்து வரவில்லை. அவர்களாக விரும்பி தேர்தல் பணியில் ஈடுபடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

நல்லது செய்வேன்

வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

கடந்த ஒரு வாரமாக அமைச்சர்கள் பலர் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதுவரை வார்டு, வார்டாக சென்று நிர்வாகிகள், மக்களை சந்தித்த நிலையில் இனிமேல் வீடு, வீடாக சென்று மக்களை சந்திப்பேன். சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், மா.சுப்பிரமணியம் போன்றோர் மேயராக இருந்த காலத்தில்தான் பல திட்டங்களை கொண்டு வந்தனர். அவர்களது முயற்சியால்தான் சென்னையில் மழை பெய்தாலும், மக்கள் சிரமப்படாமல் உள்ளனர்.

நான் இந்த தொகுதியில் சிறப்பாக வெற்றி பெறுவேன் என நம்புகிறேன். அமைச்சர் ச.முத்துசாமியுடன் சேர்ந்து மாநகராட்சிக்கு நல்லதை செய்வேன் என்ற உறுதியை தருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story